(செ.தேன்மொழி)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இந்நிலையில் தங்களது ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் தீர்வினை பெற்றுக் கொடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின், கொழும்பு மாவட்ட வேட்பாளர் சீ.வை.பி.ராம் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் ஒற்றுமையாகவும், சமத்துவத்துடனும் வாழ வேண்டும் என்பதே எமது விருப்பம். ஐக்கிய தேசியக் கட்சியிலிருக்கும் போதும் இதே எண்ணத்திலேயே செயற்பட்டோம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி எம்மை நிராகரித்து விட்டுள்ளது. அதனாலேயே சஜித் பிரமதாசவின் தலைமைத்துவத்தின் கீழ் நாங்கள் இன்று ஒன்றிணைந்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நாங்கள் விலகவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிதான் எங்களை விலக்கியுள்ளது. கட்சியின் வளர்ச்சிக்காக பல சவால்களுக்கு மத்தியில் நாங்கள் செயற்பட்டிருந்தோம். 40 வருட காலமாக கட்சிக்காக உழைத்துள்ளேன். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் கூட்டணி அமைக்க கட்சியின் செயற்குழுவே அனுமதி வழங்கியிருந்தது. தற்போது அதனை அவர்கள் மறுத்து வருகின்றார்கள்.
கடந்த நான்கரை வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஆட்சியிலிருந்த போதிலும் கட்சியின் ஆதரவாளர்களுக்காக எந்தவித பயன்தரும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. யானை சின்னத்தில் நாங்கள் பல தடவை போட்டியிட்டுள்ளோம். தற்போது யானை சின்னம் இல்லாவிட்டாலும் மக்கள் மத்தியில் எமக்கு வரவேற்புவுள்ளது.
சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் ஒற்றுமையாகவும், சமத்துவத்துடனும் வாழ வேண்டும் என்பதனையே நாங்கள் விரும்புகின்றோம். இந்நிலையிலேயே நாங்கள் சஜித் பிரமதாசவின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைந்துள்ளோம்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் பாரிய பொருளாதார பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும். இதனால் எமது அரசாங்கத்தில் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
No comments:
Post a Comment