(இராஜதுரை ஹஷான்)
நல்லாட்சி அரசாங்கத்தினால் புதைக்கப்பட்ட கண்ணிவெடியே எம்.சி.சி. ஒப்பந்தம். கன்னி வெடியை அகற்றும் போது உரிய வழிமுறைகளை கையாள வேண்டும் அவசரப்பட்டால் விளைவுகள் பாரதூரமாக அமையும். ஆளும் தரப்பினர் குறிப்பிடுவதை போன்று எம்.சி.சி. ஒப்பந்தத்தை உடனடியாக இரத்து செய்ய முடியாது. முறையான வழிமுறைகளின் ஊடாகவே ஒப்பந்தம் நீக்கப்படும் என கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு குழுவினரது அறிக்கை தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எம்.சி.சி. ஒப்பந்தத்தின் அறிக்கையை முன்வைத்தார்.
அமைச்சரவை உறுப்பினர்கள் 14 பேரும் இந்த ஒப்பந்தத்தை முழுமையாக ஆராய்ந்து தமது நிலைப்பாட்டை அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்க வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
எம்.சி.சி. ஒப்பந்தத்தை ஏன் அரசாங்கம் இதுவரையில் நீக்கவில்லை, தேர்தலுக்கு பின்னர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்று எதிர்த்தரப்பினர் தற்போது தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள்.
எம்.சி.சி. ஒப்பந்தம் நல்லாட்சி அரசாங்கத்தினால் புதைக்கப்பட்ட ஒரு கன்னி வெடி என்றே குறிப்பிட வேண்டும். கண்ணி வெடியை அகற்ற பொறுமையாகவும், அவதானமாகவும் உரிய வழிமுறைகளை கையாள வேண்டும். அவசரப்பட்டால் விளைவுகள் பாரதூரமானதாக அமையும்.
எதிர்த்தரப்பினர் குறிப்பிடுவதை போன்று எம்.சி.சி. ஒப்பந்தத்தை உடனடியாக இரத்து செய்ய முடியாது. ஒப்பந்த்தினை அடிப்படையாகக் கொண்டு 2017 மற்றும் 2018 ஆகிய காலப்பகுதிகளில் இரண்டு ஏற்பாடுகளின் ஊடாக 10 மில்லியன் ரூபா நிதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆகவே ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களில் ஒருபோதும் கைச்சாத்திடமாட்டோம். என்பதை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ சர்வதேச தரப்பில் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.
பிற நாட்டின் நிதி கிடைக்கின்றது என்ற காரணத்திற்காக நாட்டின் இறையான்மையை விட்டுக் கொடுக்க முடியாது. அரசியலமைப்பின் ஊடாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை சீர் செய்வதற்காகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை கோருகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment