ராஜபக்ஷ கூட்டத்தை நம்பியதன் பிரதிபலனை மைத்திரிபால தற்போது கண்டுகொள்கின்றார் - அஸாத் சாலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 1, 2020

ராஜபக்ஷ கூட்டத்தை நம்பியதன் பிரதிபலனை மைத்திரிபால தற்போது கண்டுகொள்கின்றார் - அஸாத் சாலி

(எம்.ஆர்.எம்.வஸீம்)

திருடர்களையும் ஊழல்வாதிகளையும் சிறையிலடைத்திருந்தால் மைத்திரிபால சிறிசேன இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக இருந்திருப்பார். ராஜபக்ஷ கூட்டத்தை நம்பியதன் பிரதிபலனை தற்போது அவர் கண்டுகொள்கின்றார் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

தேசிய ஐக்கிய முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், இன, மதவாதத்தை தூண்டியே கோத்தாபய ராஜபக்ஷ் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார். பொதுத் தேர்தலுக்கும் அதனை மேற்கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. 

ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு தேவைக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவை பெற்றுக் கொண்டனர். ஆனால் தற்போது மொட்டு கட்சியுடன் இணைந்து போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக மொட்டு கட்சியினர் பிரசாரம் செய்கின்றனர்.

அத்துடன் மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சிக்கின்றனர். தற்போது மைத்திரிபால சிறிசேனவுடன் சம்பந்தப்பட்ட எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என மொட்டு கட்சியினர் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ்வுடன் தொடர்புபட்ட திருட்டுக்கும்பல் எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பிரசாரம் செய்கின்றனர். இதனால் மொட்டுக் கட்சிக்குள் பாரிய முரண்பாடு ஏற்பட்டிருக்கின்றது.

அத்துடன் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும்போது ராஜபக்ஷ் அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்திருந்தால் அவர் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக இருந்திருப்பார். ராஜபக்ஷ்வினரை நம்பி செயற்பட்டதன் பிரதி பலனை தற்போது அவர் அனுபவித்து வருகின்றார்.

மேலும் பொதுத் தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் வெற்றியீட்டுவதாக பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த எஸ்.பி. திஸாநாயக்க, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித்த அபேவர்த்தன போன்றவர்கள் பகிரங்கமாக தெரிவித்திருந்தனர். 

ஆனால் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு கிடைக்காது என்பதுடம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைப்பதும் சந்தேகம் என தற்போது புலனாய்வுத்துறை தெரிவித்திருக்கின்றது. 

அதனால்தான் மஹிந்த ராஜபக்ஷ் அவசரமாக முஸ்லிம் மக்களுடன் சந்திப்பொன்றை கடந்த வாரம் மேற்கொண்டிருந்தார். அதில் முஸ்லிம்கள் எமக்கு புரியாணி தருவார்கள் வாக்களிக்கமாட்டார். ஆனால் இம்முறை புரியாணியும் தருவார்கள் வாக்கும் அளிப்பார்கள் என தெரிவித்திருக்கின்றார்.

முஸ்லிம் மக்கள் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு 2005 இல் வாக்களித்தார்கள். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்தது முதல் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளையே மேற்கொண்டுவந்தார். 

தற்போதும் கொரோனாவில் இறந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நடக்கம் செய்வதற்கு சுகாதார துறையின் அனுமதி இருந்தும் அதனை செய்யவிடாது எரித்ததை முஸ்லிம்கள் மறக்கமாட்டார்கள். இவ்வாறான நிலையில் ராஜபக்ஷ் அரசாங்கத்துக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என எவ்வாறு தெரிவிக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment