(எம்.மனோசித்ரா)
சுகாதார அமைச்சு முழுமையாக அறிவித்தால் நாளை மறுதினம் முதல் பொது போக்குவரத்துச் சேவையை வழமைக்கு கொண்டுவர தயாராக உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, பொது போக்குவரத்துச் சேவையை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து அமைச்சு தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டின் நிலைமை கட்டம் கட்டமாக சீராகி வரும் நிலையில் நாளை மறுதினம் முதல் நாடு வழமைக்குத் திரும்புமென எதிர்பார்க்கின்றேன். சுகாதார அமைச்சு முழுமையாக அறிவித்தால் போக்குவரத்துச் சேவை வழமைக்குத் திரும்பும். அதன்படி, மாகாணங்களுக்கிடையில் பஸ் போக்குவரத்து முன்னெடுக்கப்படும்.
இதேவேளை போக்குவரத்துச் சேவை வழமைக்குத் திரும்பினாலும் பஸ் மற்றும் ரயில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற பயணிகள் மட்டுமே அதில் பயணிக்க அனுமதிக்கப்படும். கடந்த காலங்களைப் போன்று அளவுக்கதிகமான பயணிகளை பஸ் மற்றும் ரயிலில் பயணிக்க அனுமதிக்க முடியாது. நிலைமை வழமைக்குத் திரும்பினாலும் சுகாதார விதிமுறைகளை பயணிகள் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.
இதனை கண்காணிக்கும் பொறுப்பு போக்குவரத்து பொலிஸார் மற்றும் ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பொதுமக்கள் தமது பாதுகாப்புத் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது கட்டாயம். பொலிஸார் கட்டுப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி நடப்பதே சிறந்ததாகும்.
No comments:
Post a Comment