(நா.தனுஜா)
நாடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலையின் மத்தியில் பௌத்த, இந்து, முஸ்லிம், கத்தோலிக்கர்கள் அனைவரும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டாலும், அரசாங்கம் ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் நலனை முன்னிறுத்தி சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே செயற்படுகிறது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று சர்வ கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மரணமடைந்த முஸ்லிம் நபரின் உடலை இஸ்லாமிய மதக் கோட்பாடுகளுக்கு அமைவாகப் புதைப்பதற்கு காணப்பட்ட வாய்ப்புக்கள் தொடர்பில் முஸ்லிம் தலைவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இவ்விடயத்தில் நாம் நிபுணத்துவம் பெற்றவர்கள் இல்லையென்பதால், வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் வேளையிலும் நாம் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றே செயற்பட்டோம்.
தற்போதைய நெருக்கடி நிலை அனைத்து மதத் தவர்களையும் பாதித்திருக்கிறது. எனினும் முழு நாட்டு மக்களின் நலனிலும் எத்தகைய தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்று சிந்தித்து, அதற்கேற்றவாறு செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும் இக்கூட்டத்தின் போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க ஆகியோர் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
No comments:
Post a Comment