(நா.தனுஜா)
"இறந்த நபரின் உடலை புதைப்பதில் நாம் ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். இது மிகவும் உணர்வுபூர்வமான விடயம். ஆனாலும் இது விடயத்தில் அனைத்து மக்களின் நலனையே முன்னிறுத்த வேண்டும்" என சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று சர்வ கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மரணமடைந்த முஸ்லிம் நபரின் உடலை இஸ்லாமிய மதக் கோட்பாடுகளுக்கு அமைவாகப் புதைப்பதற்கு காணப்பட்ட வாய்ப்புக்கள் தொடர்பில் முஸ்லிம் தலைவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு 3 மாத காலங்களே ஆகியிருப்பதாகவும், இன்னும் இந்த வைரஸ் தொடர்பாக முழுமையாக விபரங்கள் கண்டறியப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
அதுமாத்திரமன்றி இந்த வைரஸ் பரவக்கூடிய பல்வேறு முறைகள் இன்னமும் கண்டறியப்படுவதாகவும், எனவே அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரப் பிரிவினர் கடுமையாக முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இக்கூட்டத்தின் போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோர் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
No comments:
Post a Comment