யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள், தயவுசெய்து உண்மைகளை மறைக்காதீர்கள் - பொதுமக்களிடம் விடுக்கும் உருக்கமான வேண்டுகோள் ! - News View

About Us

About Us

Breaking

Friday, April 3, 2020

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள், தயவுசெய்து உண்மைகளை மறைக்காதீர்கள் - பொதுமக்களிடம் விடுக்கும் உருக்கமான வேண்டுகோள் !

(எம்.எப்.எம்.பஸீர்) 

தாம் யாருடன் எல்லாம் பழகினோம் என்பதை தயவு செய்து ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். விஷேடமாக மேல் மாகாணத்தின் கொழும்பு களுத்துறை, கம்பஹா மாவட்டங்கள் புத்தளம், கண்டி, யாழ். மாவட்டங்களில் உள்ளவர்கள் இக்காலப்பகுதியில் பழகியவர்கள் தொடர்பில் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவியுங்கள். நீங்கள் உண்மையான தகவல்களை வழங்கும் போது உங்களையும் உங்களை சுற்றி இருப்போரையும் காப்பாற்ற இலகுவாக இருக்கும். தயவுசெய்து உண்மைகளை மறைக்காதீர்கள். என பொலிஸ் சட்ட பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களிடம் விஷேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் வழங்கும் போதே அவர் பொதுமக்களிடம் இந்த உருக்கமான வேண்டுகோளை விடுத்தார். 

இதன்போது அவர் மேலும் சுட்டிக்காட்டியதாவது, 'உண்மையில் இலங்கையில் சுகாதாரத் துறையும் பாதுகாப்புத் துறையும் கொரோனா வைரஸ் தொற்றை முறியடிக்க முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மிக மெச்சத்தக்கது. எமது நாட்டில் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் தேசிய உளவுத் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

அவர்கள் ஊடாக நாம் தொற்றுக்குள்ளான ஒருவரின் தொடர்பாடல் வலையமைப்பை கண்டறிந்து தேவையான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கக் கூடியதாக உள்ளது. அதனாலேயே தற்போது கண்டறியப்படும் தொற்றாளர்களில் பெரும்பாலானோர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகப்பட்டு கண்காணிக்கப்பட்டுவரும் இடங்களில் இருந்து கண்டறியப்படுகின்றனர். இந்நிலைமை கொரோனா தொற்றின் சமூக பரவலாக்கத்தை கண்டிப்பாக கட்டுப்படுத்தும். 

இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்கள் குறித்து உளவுத் துறை சேகரித்துள்ள தகவல்களை பகுப்பாய்வு செய்யும் போது, அந்த அனைத்து தொற்றாளர்களும் நேரடியாக, மறைமுகமாக ஒரு வலையமைப்பின் கீழ் தொடர்புபட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. 

எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைத்தால், எமக்கு அதில் வெற்றி கிடைக்கும். தாம் யாருடன் எல்லாம் பழகினோம் என்பதை தயவு செய்து பொதுமக்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 

குறிப்பாக மேல் மாகாணத்தில் வசிப்போர், கண்டி, புத்தளம், யாழ். மாவட்டத்தில் வசிப்போர் யாருடன் பழகினீர்கள் என்பதை நினைவுபடுத்தி பாருங்கள். உங்களுக்கு ஏதேனும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவியுங்கள். 

எந்த சந்தர்ப்பத்திலும் பாதுகாப்புத் தரப்பினர் சுகாதார அதிகாரிகள், வைத்தியர்களிடம் பொய்யான தகவல்களை கூறாதீர்கள். உண்மையைக் கூறுங்கள். கொரோனா வைரஸ் தொற்று உங்கள் துர்நடத்தையால் ஏற்படும் தொற்று அல்ல. அத்தொற்றுக்கு உள்ளாவது உங்கள் பிழையால் அல்ல. எனவே அது குறித்து உண்மைகளை கூறத் தயங்காதீர்கள்' என தெரிவித்தார்.

No comments:

Post a Comment