(நா.தனுஜா)
தற்போது வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் ஏராளமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் அதேவேளை, கொவிட்-19 நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட சந்தை நிலைமைகளின் பின்னணியில் இலங்கையின் ஏற்றுமதியை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள் வெளிவிவகார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இச்செயற்பாடு வெற்றிகரமாக அமைந்தால், கொவிட்-19 க்குப் பிந்தைய உலகின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இலங்கை ஒரு படி முன்னேற்றம் கண்டிருக்கும் என்று அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, தற்போதைய இறுக்கமான காலகட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதியை மேம்படுத்துவதில் இலங்கையின் 67 தூதரகங்கள் மற்றும் உதவித் தூதரக அலுவலகங்களின் வலையமைப்பினால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் தொற்று நோயின் போது பொருளாதாரத்தை தக்கவைத்துக் கொள்வதிலும், அதன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைத் தணிப்பதிலுமான அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டத்தை ஆதரிப்பதற்காக, புதிய சந்தைகளில் இலங்கைத் தயாரிப்புக்களை அணுகிக் கொள்வதனை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதரகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றது.
கொவிட்-19 தொற்று நோயின் பின்னணியில், வளர்ந்து வரும் உலக சந்தைகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற நாடுகளில் அமுலிலுள்ள நடைமுறைகள், தேவைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள் வழங்கிய வாராந்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு அமைவாக, தேயிலை, சுவையூட்டிகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், ரப்பர் கையுறைகள், முகமூடிகள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகமூடிகள், சத்திரசிகிச்சை முகமூடிகள், சத்திரசிகிச்சைத் தொப்பிகள், சத்திரசிகிச்சை ஆடைகள், சுகாதார மெல்லிழைத்தாள்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, பழங்கள் மற்றும் மரக்கறிகள், சுவையூட்டிகள் மற்றும் கடல் உணவுகள் தொடர்பாக இலங்கையின் ஏற்றுமதியாளர்களை பத்து நாடுகளிலுள்ள இறக்குமதியாளர்களுடன் இணைப்பதற்கு இந்த முயற்சி இதுவரை உதவியுள்ளது.
இன்றுவரை புதுப்பிக்கப்பட்ட 56 சந்தை தகவல்களை வெளிநாடுகளுக்கு இலங்கை வழங்கியுள்ளதாகவும், அவை அனைத்தும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும், அதனை https://www.edb.gov.lk/marketalerts என்ற இணைய முகவரியில் அணுகிக் கொள்ள முடியும் என்றும் பொருளாதார விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் பி.எம். அம்ஸா தெரிவித்திருக்கிறார்.
இலங்கைத் தேயிலைக்கான தேவை 21 நாடுகளிலும் (கடந்த இரண்டு வாரங்களில் செயற்படுத்தப்பட்ட துருக்கிக்கான 336 மெட்ரிக் டன், எகிப்துக்கான 100 மெட்ரிக் டன் மற்றும் லிபியாவிற்கான 25 மெட்ரிக் டன் செயற்கட்டளைகள் உள்ளடங்கலாக), முகமூடிகளுக்கான தேவை 25 நாடுகளிலும், பாதுகாப்பு ஆடைகளுக்கான தேவை 15 நாடுகளிலும், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கான தேவை 13 நாடுகளிலும் மற்றும் ரப்பர் கையுறைகளுக்கான தேவை 15 நாடுகளிலும் இருப்பதனை இதுவரை பெறப்பட்ட புதுப்பிக்கப்பட்ட சந்தைத் தகவல்களின் சுருக்கம் வெளிப்படுத்தியுள்ளது. மேலும், 13 நாடுகளில் உணவு மற்றும் மரக்கறிகளுக்கான தேவைகள் உள்ளன.
மத்திய கிழக்கு மற்றும் துருக்கியிலுள்ள பல்வேறு இடங்களுக்கான தேயிலை சரக்குகள் மற்றும் பல்வேறு தயாரிப்புக்கள் தொடர்பான ஏற்றுமதி ஆவணங்களை அங்கீகரிக்கும் செயன்முறையை விரைவுபடுத்துவதற்காக, இலங்கைத் தேயிலை சபையுடன் இணைந்து அமைச்சு செயற்படுகின்றது.
ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை உணர்ந்து, இலங்கை ஏற்றுமதியாளர்களின் சம்பந்தப்பட்ட ஆவணங்களை தடை நீக்கம் செய்வதற்கு வசதியாக, ஏற்றுமதி செய்யும் குறிப்பிடத்தக்க இடங்களில் சுங்கம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் முறையான கோரிக்கைகளை அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.
ஏற்றுமதி ஆவணங்களை அங்கீகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக, கொழும்பைத் தளமாகக் கொண்ட பல்வேறு இராஜதந்திரத் தூதரகங்களும் இந்த முயற்சியில் ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளன.
மேலும், தற்போதைய கொவிட்-19 தொற்று நோய் நிலைமை மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றுக்கு மத்தியிலும், இலங்கையில் தங்கியிருப்பதற்குத் தீர்மானித்த 12,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை இலங்கை சுற்றுலாத் துறைக்கு அமைச்சு வழங்கி வருகின்றது.
வணிக மற்றும் பட்டய விமானங்கள் மூலமாக தொடர்ந்தும் நாடு திரும்புகின்ற போதிலும், மேற்கத்தேய நாடுகளைச் சேர்ந்த 4000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இதில் உள்ளடங்குவர். நெருக்கடி நிலைமையை கருத்திற் கொண்டு, இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கான வீசாக்கள் 2020 மே 12 ஆந் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment