(நா.தனுஜா)
ஊடக செய்திகள் சிலவற்றில் கூறப்பட்டிருப்பதைப் போன்று அரசியலைப்பு பேரவைக்கூட்டத்தில் எவ்வித சச்சரவுகளும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்திருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஊடகப்பிரிவு, சர்ச்சைகளை ஏற்படுத்தும் விதமான தலைப்புடன் பொய்யான செய்திகளை ஊடகங்கள் பிரசுரிப்பது குறித்து விசனத்தையும் வெளியிட்டிருக்கிறது.
அரசியலமைப்புப் பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், 'அக்கூட்டத்தில் கரு ஜயசூரிய மீது மஹிந்த சமரசிங்க விமர்சனம்' என்ற பொருள்பட இரு தேசிய பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன.
அது குறித்து விளக்கமளிக்கும் வகையில் கரு ஜயசூரியவின் ஊடகப்பிரிவு இன்றைய தினம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,
குறித்த இரு தேசிய பத்திரிகைகள் வெளியிட்டிருக்கும் செய்தித் தலைப்புக்களைப் பார்க்கும் போது, அரசியலமைப்புப் பேரவைக் கூட்டத்தில் பாரிய சச்சரவொன்று ஏற்பட்டது போன்ற தோற்றப்பாடே ஏற்படுகிறது.
எனினும் அரசியலமைப்புப் பேரவைக் கூட்டத்தில் ஒரு உறுப்பினர் மீது மற்றொருவர் குற்றஞ்சாட்டும் விதமாகவோ அல்லது விமர்சிக்கும் விதமாகவோ எந்தவொரு சம்பவங்களும் இடம்பெறவில்லை என்பதுடன், நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு மிகவும் பொறுப்பு வாய்ந்த வகையிலேயே கலந்துரையாடல் இடம்பெற்றது.
அரசியலமைப்புப் பேரவைக் கூட்டத்திற்கான அழைப்புக் கடிதத்தில் 'அரசியலைப்புப் பேரவைத் தலைவரும் முன்னாள் சபாநாயகரும்' என்பதற்குப் பதிலாக 'அரசியலமைப்புப் பேரவைத் தலைவரும் சபாநாயகரும்' என்று அச்சிடப்பட்டமை தவறுதலாக இடம்பெற்ற பிழை என்பதை உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
அவ்வாறிருக்க சர்ச்சைகளை ஏற்படுத்தும் விதமான தலைப்புடன் பொய்யான செய்திகளை ஊடகங்கள் பிரசுரிப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
பாராளுமன்றத்தை கலைத்து 72 மணி நேரம் நிறைவடைவதற்குள் தனது உத்தியோகபூர்வ அலுவலகம், இல்லம், வாகனம் அனைத்தையும் கையளித்து சாதாரண பிரஜையாக தனது சொந்த வீட்டிற்குத் திரும்பிய முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு "சபாநாயகர்" என்ற பதவிப் பெயரைப் பயன்படுத்துவதற்கான எந்தவொரு அவசியமும் இல்லை என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகிறோம்.
No comments:
Post a Comment