(ஆர்.யசி)
கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் இன்னமும் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. எனவே தொடர்ந்தும் மக்கள் செயற்பாடுகளில் கட்டுப்பாடுகளை விதித்தாக வேண்டியுள்ளது என கூறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க, மேலும் ஒரு வார கால செயற்பாடுகளை அவதானித்து மாற்று நடவடிக்கைகளை கையாள தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்.
கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்து சுகாதார பணிப்பகம் மற்றும் அரசாங்கம் அவதானித்துள்ள விடயங்கள் மற்றும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கவுள்ள தீர்மானங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவல் இலங்கையில் இன்னமும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. இன்னமும் நோயாளர்களை அடையாளம் கண்ட வண்ணமே உள்ளோம். அவ்வாறு இருக்கையில் நாட்டினை வழமையான நடைமுறைக்கு அனுமதிக்க முடியாது. தொடர்ந்தும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நீண்ட கால சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுத்தாக வேண்டும். ஆகவே மக்கள் இப்போது எவ்வாறான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகின்றீர்களோ அதனை தொடர்ந்தும் முன்னெடுத்தாக வேண்டும்.
எவ்வாறு இருப்பினும் நாடு வழமைக்கு திரும்ப மேலும் சில காலம் தேவைப்படும். கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த மேலும் சில காலத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்தாக வேண்டும். இதன்போது பொதுப் போக்குவரத்து, தொழில் நிலையங்கள், வீதிகள், பொது சந்தைகள் என எங்கும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியாக வேண்டும்.
அதேபோல் சிகை அலங்கார நிலையங்கள் தொடர்ந்தும் மூடப்பட வேண்டும், முச்சக்கர வண்டிகளில் பயணிகள் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும், பொது போக்கு வரத்துகளில் பயணிக்கையில் இடைவெளிகளை பேண வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நீடிக்கின்றது.
மிக முக்கியமாக நாட்டில் தற்போது ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் நீடிக்க ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் மேலும் ஒரு வார காலம் நிலைமைகள் எவ்வாறானது என்பதை அவதானித்து மக்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமையும், சுகாதார பணிப்புரைகளை பின்பற்றுகின்றனரா என்பது குறித்து அவதானம் செலுத்தி அதன்போது நிலைமைகள் மோசமாக இருந்தால் நாடளாவிய ரீதியிலான ஊரடங்கை மீண்டும் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கொரோனா வைரஸ் குறித்த அவதான செயலணியுடன் விசேட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஊரடங்கு சட்டத்தை தளர்க்க அரசாங்கம் சில மாற்று நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதற்கு சுகாதார வேலைத்திட்டம் குறித்து எமது முழுமையான பங்களிப்பை செலுத்தி வருகின்றோம். எனினும் நாட்டின் நிலைமைகளை தொடர்ச்சியாக கண்காணித்து உடனடியாக மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரலாம் அதற்கேற்றால் போலும் எமது மாற்று நடவடிக்கை திட்டங்கள் உள்ளது என்றார்.
No comments:
Post a Comment