நிவாரணங்கள்,கொடுப்பனவுகளை வழங்கி ஏனைய நாடுகளுக்கு இலங்கை முன்மாதிரியாகத் திகழ்கிறது : தேசிய உற்பத்தி ஊக்குவிப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Friday, April 24, 2020

நிவாரணங்கள்,கொடுப்பனவுகளை வழங்கி ஏனைய நாடுகளுக்கு இலங்கை முன்மாதிரியாகத் திகழ்கிறது : தேசிய உற்பத்தி ஊக்குவிப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்

(எம்.மனோசித்ரா) 

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 54 இலட்சத்துக்கும் அதிக குடும்பங்களுக்கு நிவாரணங்களையும் கொடுப்பனவுகளையும் வழங்கி ஏனைய நாடுகளுக்கு இலங்கை முன்மாதிரியாகத் திகழ்வதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, இதன் பின்னணியின் நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதால் தேசிய உற்பத்தி ஊக்குவிப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

இன்று வெள்ளிக்கிழமை இராஜகிரியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், பசில் ராஜபக்ச தலைமையில் செயற்படுகின்ற ஜனாதிபதி செயலணியினால் பெருமளவானோருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 

5 இலட்சத்து 59 ஆயிரம் முதியோர் இதற்கு முன்னர் காணப்பட்டனர். எனினும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் நாம் தகவல் திரட்டிய போது இந்த எண்ணிக்கை 5 இலட்சத்து 94 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதியோருக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. 

அதேபோன்று அங்கவீனமுற்றோர் 35 ஆயிரத்து 229 பேர் காணப்பட்டனர். அந்த எண்ணிக்கை தற்போது 39 ஆயிரத்து 677 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 39 ஆயிரத்து 170 நீரிழிவு நோயாளர்கள் முன்னர் இனங்காணப்பட்டனர். அது தற்போது 44 ஆயிரத்து 477 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் புதிதாக சமூர்த்தி பயனாளிகளாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 6 இலட்சத்து 339 பேருக்கு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்த்திருந்தோம். எனினும் தற்போது சமூர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை 7 இலட்சம் வரை அதிகரித்துள்ளது. இவர்கள் உள்ளிட்ட ஏனைய பல்வேறு தரப்பினருக்கும் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த கொடுப்பனவு மற்றும் நிவாரணங்கள் ஊடாக ஏனைய நாடுகளுக்கு நாம் முன்னுதாரணமாகத் திகழ்கின்றோம். எனினும் இதன் பின்னணியின் நாம் வேறு பல நெருக்கடிகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. அந்நிய செலாவணி முற்றாக முடங்கியுள்ளது. 

எனவே நாம் தற்போது தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும். பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் உருவாக்கப்படும் அரசாங்கம் தேசிய உற்பத்தி ஊக்குவிப்பில் பிரதான கவனம் செலுத்தும் என்றார்.

No comments:

Post a Comment