(செ.தேன்மொழி)
ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் செயற்குழுவின் தீர்மானம் தொடர்பில் தாம் அவதானம் செலுத்தப் போவதில்லை என்றும், அவர்கள் கூறுவதைப் போல் செயற்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சி அழிவை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு அனைவரையும் ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான நவீன் திஷாநாயக்க மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட குற்றச்சாட்டுகளற்ற சிரேஷ்ட உறுப்பினர்களை தம்முடன் இணைந்து பயணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, வரலாற்று சிறப்புமிக்க பழமை வாய்ந்த கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக் வேண்டியது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் கடமையாகும்.
குறிப்பிட்ட காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஒரு ஜனாதிபதியை உருவாக்க முடியாமல் போயுள்ளது. இதனை கருத்திற் கொண்டே கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் சஜித் பிரேமதாசவை நாங்கள் களமிறக்கியிருந்தோம்.
இருந்த போதிலும் அவரால் வெற்றியடைய முடியாமல் போயுள்ளது. அவரது தோல்விக்கு எமது கட்சியைச் சேர்ந்த சிலரின் செயற்பாடுகளும் பிரதான காரணங்களாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தலைமைத்துவத்தை தம்வசம் தக்க வைத்துக் கொண்டே செயற்படுகின்றனார். 26 வருடங்களாக அவரே தலைவராக இருந்து வருவதுடன் தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும் இடமளிக்கால் இருக்கின்றார்.
இவ்வாறான நிலைமை ஜனநாயக தன்மையற்றதாகும். தொடர்ந்தும் தோல்வியை எதிர்கொண்டு வரும் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றியின் பாதைக்கு இட்டுச் செல்வதற்காக நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கும் அவர் இடமளிப்பதாக தோன்றவில்லை.
தற்போதைய அரசாங்கத்தை விமர்சிக்க கூடிய பலம் வாய்ந்த எதிர்கட்சியை உருவாக்குவதே எமது நோக்கமாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment