சர்வதேசத்திற்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும் - சம்பந்தன் நெதர்லாந்து தூதுவரிடம் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 4, 2020

சர்வதேசத்திற்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும் - சம்பந்தன் நெதர்லாந்து தூதுவரிடம் தெரிவிப்பு

யுத்த காலத்தின்போது ஒரு அரசியல் தீர்வு தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் பல்வேறு உறுதி மொழிகளை வழங்கியிருந்தது. நீண்டகாலமாக நிலவும் இந்த பிரச்சினைக்கு தீர்வினை காணும் நோக்கில் அந்த வாக்குறுதிகள் மதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் அவர்கள் நேற்றைய தினம் (03.03.2020) தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பின் போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் பேசப்பட்ட விடயங்கள் வருமாறு, நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன், கடந்த தேர்தல் பிரச்சாரங்களில் உண்மைக்கு புறம்பாக சிங்கள மக்கள் மத்தியில் அவர்களது இருப்பிற்கு ஆபத்து உள்ளது என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதனை சுட்டிக்காட்டிய இரா சம்பந்தன், மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து விலகும் இலங்கை அரசின் முடிவானது நாட்டிற்கு நன்மைபயக்காத ஒன்று எனவும் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகள் தொடர்பில் தமிழ் சிங்கள பேதமோ பிரச்சினைகளோ இல்லை என தெரிவித்த இரா சம்பந்தன், எவரேனும் சர்வதேச மனிதநேய சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை எவரேனும் மீறியிருப்பின் அத்தகைய நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

மனித உரிமை பேரவையின் பேரவையானது இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் மூன்று முக்கிய உள்ளடக்கங்களை கொண்டதாகும் என தெரிவித்த இரா சம்பந்தன், இலங்கையில் நிலையான சமாதானத்தினை அடைய வேண்டுமெனில் இந்த மூன்று அம்சங்களையும் அடைய வேண்டியது வசியம் எனவும் வலியுறுத்தினார். மேலும், உண்மை நிலைநாட்டப்பட்டு நீதியானது நியாயமான ஒரு நீதிப்பொறிமுறைக்கூடாக அடையப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தின் சார்பில் யுத்தத்தினை முன்னெடுத்த அரச படைகள் பொதுமக்கள் தொடர்பில் பொறுப்பும் கடப்பாடும் கொண்டவர்களாக இருத்தல் அவசியமானது என தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள் அப்படியாக நடந்துகொள்ள வேண்டியவர்கள் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்களிற்கு முரணாக செயற்பட்டிருந்தால் அத்தகையவர்கள் தங்களது நடவடிக்கைகளிற்கு பொறுப்பு கூறல் அவசியமாகும் எனவும் வலியுறுத்தினார்.

இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் நெதர்லாந்து அரசு தொடர்ந்தும் மீளாய்வு செய்து அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் தெரிவித்தார்.

யுத்த காலத்தின்போது ஒரு அரசியல் தீர்வு தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் பல்வேறு உறுதி மொழிகளை வழங்கியிருந்தமையை சுட்டிக்காட்டிய இரா சம்பந்தன் நீண்டகாலமாக நிலவும் இந்த பிரச்சினைக்கு தீர்வினை காணும் நோக்கில் அந்த வாக்குறுதிகள் மதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த விடயங்கள் குறித்து தீர்வினை கண்டுகொள்ளாத சந்தர்ப்பத்தில் நாட்டிற்க்கு முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை என்பதனை சுட்டிக்காட்டிய இரா சம்பந்தன் பல தசாப்தங்களாக அதிகாரபரவலாக்கம் தொடர்பிலான பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்ற என்பதனையும் சுட்டிக்காட்டினார். 13வது திருத்தச்சட்டத்திற்கு பிற்பாடு பல்வேறு வரைபுகள் இது தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ளதனையும் அநேக விடயங்களில் பாரியளவு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதனையும் சுட்டிக்காட்டினார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் உட்கட்டமைப்பு மற்றும் திறன் அபிவிருத்தி ஆகியனவற்றை உள்ளடக்கிய ஒரு பூரண அபிவிருத்தி திட்ட வரைபொன்று சர்வதேச சமூகத்திற்கு முன்வைக்கப்படும் என தெரிவித்த இரா சம்பந்தன் அந்த திட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் தமது பங்களிப்பினை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதன்போது பதிலளித்த நெதர்லாந்து தூதுவர் அவர்கள் வட கிழக்கு அபிவிருத்திக்கு தமது பூரண ஓத்துழைப்பினை வழங்குவதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment