ஓட்டமாவடி நிருபர் அ.ச.மு. சதீக்
கொரோனா தொற்றிலிருந்து மக்களை விடுவிக்க பல்வேறு செயற்றிட்டங்களை அரசாங்கம் மிகவும் சிரத்தையோடு நடைமுறைப்படுத்தி வருவதை நாம் பாரக்கலாம். கொரோனா தொடர்பான பீதிகள் இன்று உலகம் எங்கும் பரவிக்காணப்பட்டாலும் கொரோனா நமக்குள் பல்வேறு செய்திகளை தொட்டு செல்கின்றதனை பார்க்க முடிகிறது.
எமது நாட்டில் ஒரு சவால் நிலவுகின்றபோது மற்ற நாடுகளில் உள்ள விடயங்களை கவனத்திற் கொண்டுதான் எமது நாட்டின் விடயங்களை மேற்கொள்ளுகின்ற போக்கை நம் நாட்டின் வரலாறு நெடுகிலும் பார்க்கின்றோம். ஒவ்வொரு துறையிலும் எமது நாட்டுக்கென்று ஒரு தொலைநோக்கு பணிக்கூற்று இருந்தாலும். அது வெறுமனே காட்சிப்படுத்தலாகவே இருக்கின்றதோடு செயல்திறன் குறைவாகவே காணப்படுகின்றது.
எமது நாட்டு கல்வி முறைமை, சுகாதார முறைமை, பொது நிர்வாக முறைமை, அனர்த்த முகாமை, போக்குவரத்து துறை என்பவைகளுள் பெருன்பான்மையான துறைகளுக்குள் இன்னமும் எமது நாட்டில் போர்த்துகேயர், ஒல்லாந்தர மற்றும் ஆங்கிலேயர் எதனை விட்டுச் சென்றார்களோ அதனை வைத்துதான் நாம் இன்னும் சிந்திப்பவர்களாக இருக்கின்றோம்.
இது எமது பிழை அல்ல. எமது நடைமுறையாகவே மாற்றப்பட்டுவிட்டது. இந்த நடைமுறைகள் பிழையா அல்லது சரியா என்ற ஆய்வு எமது இளம் சமூதாயத்திடத்திலிருந்து உருவாக்கப்படல் வேண்டும். இந்த நடைமுறைமைகளை விட புது நடைமுறைகளை எமது நாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். எமது நாட்டில் சகல துறைகளுக்குமான ஆய்வு நிலையங்கள் நிறுவப்படல் வேண்டும். இந்த ஆய்வு நிலையங்கள் புது புது கண்டுபுடிப்புகளை கண்டு பிடிக்க வேண்டும்.
இந்த விடயங்கள் எமது நாட்டிற்கு பொருத்தமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை சகலருக்கும் வரும். இங்கிலாந்தின் சகல ஆடைகளும் இலங்கைக்கு பொருந்தாது பெரும்பாலும் அவர்கள் குளிருக்கும் அணியும் ஆடை நுவரெலியா போன்ற குளிர் வலயங்களுக்கு பொருந்தும். ஆனால் இங்கிலாந்தின் குளிருக்கு அணிகின்ற ஆடைகளை இலங்கை இறக்குமதி செய்து விட்டு இதைத்தான் எல்லோரும் அணிய வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது.
எமது நாட்டின் காலநிலை மக்களின் மத, கலாச்சார, உடல் நிலை மக்களின் மனநிலை என்பன ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அவற்றை இறக்குமதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை போன்ற உற்பத்திகளை இலங்கையில் தயாரிக்க வேண்டும். இலங்கையில் சில அரசியல் புள்ளிகளின் இலாபங்களுக்காக அவைகள் இறக்குமதி செய்யக்கூடாது அல்லது உற்பத்தி செய்யக்கூடாது மக்களின் நலனை அடிப்படையாக கொண்டு இறக்குமதியோ அல்லது உற்பத்தி செய்வதற்கு எமது நாட்டின் ஆய்வு நிலையங்கள் அவற்றை உறுதி செய்ய வேண்டும்.
இவற்றில் முக்கியமாக எமது நாட்டிற்கு வருகின்ற அனேகமாக உணவுகள் மாணவர்கள் மற்றும் இளம் சிறார்களின் உடல் நிலையை பாதிக்க கூடியதாகவே இருக்கின்ற நிலைமையை இன்று சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. பாடசாலைகளில் தடையும் செய்துள்ளது. எமது இளம் தலைமுறையினரின் நோய் எதிர்ப்பு சக்தியை குன்ற செய்கின்ற உணவுகளால் எமது நாட்டுக்குள் இவ்வாறான வைரஸ்கள் மற்றும் நோய் கிருமிகள் இலகுவாக பரவத்தொடங்கும்.
ஏனைய நாடுகள் எலிகள் மற்றும் ஏனைய பிராணிகளுக்கு பரிசோதனை செய்கின்றார்கள் அதனைப்போன்று வளர்முக நாடுகளில் மனிதர்களில் பரிசோதனை செய்து அவற்றின் முடிவுகளை பார்த்துதான் அவர்களின் நாடுகளின் சந்தைகளுக்கு செல்கின்றது என்பதனை நாங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
எமது நாட்டில் வெளியேறுகின்ற மாணவர்கள் உற்பத்திதிறன், ஆய்வு திறன் குன்றிய மாணவர்களாகவே காணப்படுவதனை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் பாடசாலைகளில் ஆய்வு கூடங்கள் இருக்கின்றது. கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் ஒப்படைகள், ஆய்வுக்கட்டுரைகள் இருக்கின்றது. பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் ஒரு பாடமாக நடாத்தப்பட்டு ஆய்வுகள் எழுதப்படுகின்றன.
ஆனால் ஆய்வுத்துறையில் எமது மாணவர்கள் அல்லது இளம் தலைமுறையினர் அக்கறை செலுத்தாமல் காலத்தை வீணடித்து மனித வளம் வீணடிக்கப்படுவது கவலைக்குறியது. இம்மாணவர்களில் ஆய்வுத்துறையில் சிறந்து விளங்குகின்ற மாணவர்களை இனம் மத பேதம் பாராது அவர்களுக்கான தனித்தனித் துறைகளில் சகல நவீனத்துவம் வாய்ந்த ஆய்வு கூடங்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கான ஊக்குவிப்பு செயற்படுத்தப்பட வேண்டும்.
எமது நாட்டில் படித்த தலைசிறந்த அறிவியல் துறை விற்பன்னர்களை இன்று மேற்கத்தைய நாடுகள் விலை செலுத்தி பெற்று அவர்கள் மூலமாக கண்டு பிடித்த கண்டுபிடிப்புகளுக்கான உரிமத்தை அந்த நாடு பெற்றுக்கொண்டு அந்த நாடு பொருளாதார ரீதியாக முன்னேறுகின்ற நிலைமைகளை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. ஏன் எம்மால் முடியாமல் போனது என்ற கேள்வி எமக்குள் இருக்கின்றது.
வெளிநாடுகளில் வெளியேறுகின்ற எமது அறிவியல் துறை விற்பன்னர்களிடம் கேட்டால் எமக்கு உரிய செயற்றிட்டத்தை நிறைவேற்ற அதி நவீனத்துவம் வாய்ந்த கருவிகள் வேண்டும் அவற்றை இலங்கை அரசிடம் கடிதங்கள் எழுதியும் எமது ஆய்வுகளை கொடுத்தும் எந்த பிரயோசனமும் எட்டவில்லை. மற்றும் அது தொடர்பான அறிவியல் ஆய்வை மேற்கொள்ள சிரேஸ்டத்துவம் வாய்ந்த வழிகாட்டல் இலங்கையில் இல்லை, எமது தனிப்பட்ட வாழ்க்கையில் பொருளாதராத்தை முன்னேற்ற எமது நாடு போதிய ஊதியம் தராது என்ற விடயங்களை முன்வைக்கின்றனர்.
பிடல் கேஸ்ட்ரோவும், சேகுவராவும் 1959ம் ஆண்டு படிஸ்டாவின் சுரண்டல் ஆட்சியை புரட்சி மூலம் வீழ்த்தி, மருத்துவ கட்டமைப்பை நிறுவ அவரது சக போராளியான மருத்துவருமான சேகுவரா பல்வேறு செயற்றிட்டங்களை முன்வைத்து பிடல் காஸ்ரோவுக்கு உதவினார். இதன் மூலம் இன்று சிறந்த மருத்துவ கட்டமைப்பை கியூபா கொண்டுள்ளது. கியூபாவில் இருக்கும் மருத்துவர்கள் கியூபாவில் தங்கியிருந்து மருத்துவ சேவை செய்ய வேண்டும். தேவைப்படும் போது மற்ற நாடுகளில் நிகழும் இயற்கை பேரிடர்களின் போது தன்னார்வ தொண்டர்களாக செயல்பட வேண்டும். இந்த மருத்துவ பிரிவை மருத்துவ புரட்சி படை என்று அழைக்கப்பட்டனர்.
மருத்துவ கல்லூரிகளை பல்வேறு இடங்களில் கியூபாவில் நிறுவியமை, மருத்துவ சேவையை இலவசமாக மக்களுக்கு வழங்கியமை, மருந்துகளுக்கு விலையை குறைத்தமையினால் இன்று கொரோனாவை எதிர்கொண்டு மற்ற நாடுகளுக்கும் உதவக்கூடியவர்களாக காணப்படுகின்றனர்.
இந்த நாட்டுக்கு பல்வேறு பொருளாதார தடைகள் இருந்தும் இந்த நாடு இன்று முதலாளித்துவ நாடுகளுக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமான மருத்துவ சேவையை வழங்குகின்ற நாடாக மாறியுள்ளது. இந்த நாடு தனது நாட்டுக்கான நிலைமைகளை விளங்கி சுயமான மருத்துவ படையை உருவாக்கியது அதுமட்டுமல்லாது அம்மருத்துவ படையை தனது நாட்டிலிருந்து வெளியேறவிடாமல் அவர்களின் சுயதேவைகளை பூர்த்தி செய்தது. இன்று அதனால் தன்னார்வ தொண்டர்களாக சேவையாற்றும் பெருமை அந்நாட்டுக்குரிய சிறப்பம்சமாக மாற்றியுள்ளது.
அதனை போன்று ஈரான் ஏவுகணைகளை பிற நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கில் கொள்வனவு செய்த போது ஈரானின் ஆன்மிக தலைவர் இராணுவத்திற்கும் மற்றும் விஞ்ஞானிகளுக்கும் இட்ட கட்டளை நீங்கள் இரண்டை மாத்திரம் வைத்துக் கொண்டு மீதி ஏவுகனைகளை நீங்கள் திருப்பி கொடுத்து விடுங்கள் என்றார்.
ஈரான் நாட்டில் உள்ள விஞ்ஞானிகளும் மற்றும் இராணுவத்தினரும் இந்த இரண்டு ஏவுகனைகளை கழற்றி பரிசோதனை செய்து இதனை விட சிறப்பான ஏவுகனைகளையும் இராணுவ பலத்தையும் உருவாக்குங்கள் என்ற செய்தி அறியக்கிடைக்கின்றது. இன்று அந்த நாடும் பல்வேறு பொருளாதார தடைகள் வந்தும் அங்கும் ஆய்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இன்று கியூபா என்ற நாடு பொருளாதார தடைகளைகளையும் தாண்டி உலகத்துக்கே எடுத்து காட்டாக பல்வேறு மருத்துவ கல்லூரிகளை நிறுவி அவர்களின் ஆரோக்கியத்துக்கான மருந்துகளை கண்டுபிடித்து இன்று மற்றைய நாடுகளுக்கு கியூபா உதவி செய்வதனை பார்க்கின்றபோது எமக்கு மகிழ்ச்சியை தந்தாலும் அதனை விட சிறந்த எமது நாடு இன்று வரைக்கும் அவ்வாறான தொரு ஏதாவது ஒரு துறையிலேனும் முன்னேறாது பிற நாடுகளுக்கு எமது நாட்டை அடகு வைத்து கடன் பெறுகின்ற நாடாக இருக்கின்ற நிலைமையை எதிர்காலத்தில் எமது நாடு இன்னுமொரு நாட்டின் குடிபரம்பலை அதிகரிக்க செய்கின்ற அல்லது நிலத்தை அபகரிக்க செய்கின்ற நிலைமையை இல்லாமல் செய்து எமது நாட்டுக்கான ஆகக்குறைந்தது ஒரு துறையேனும் நாங்கள் முன்னேற்ற வேண்டும்.
இங்கு நாங்கள் மற்ற நாடுகளோடு பிணக்குகளை ஏற்படுத்தி இலங்கை நாடு முன்னேற வேண்டும் என்ற அரத்தத்தில் ஈரானையும கியூபாவையும் முன்வைக்கவில்லை. இவ்வாறான கஸ்டங்களோடும் அந்த ஈரானும் கியூபாவும் முன்னேறியுள்ளன என்ற எண்ணப்பாடு எங்களுக்குள் வர வேண்டும்.
எமது நாட்டின் மக்களுக்குள் இலங்கையர் என்ற நாமம் வர வேண்டும் வெறுமனே அரசியலுக்காக எம்மை பிரித்து விட்டு பின்னர் நாம் அனர்த்தங்களில் ஒன்றுபடுவதில் அர்த்தமில்லை. ஏனென்றால் அனரத்தத்தில் கட்டுப்படுத்தல் மாத்திரமே செய்யலாம் ஆனால் நாம் ஒன்றுபட்டால் வருகின்ற அனர்த்தங்களிலிருந்து சகலரையும் பாதுகாக்கலாம் எம்மவர்களை எம் தேசத்தவர் நாட்டுப்பற்றுள்ளவராக நாங்கள் மாற வேண்டும்.
இந்தக் கொரானாவும் சுனாமியும் எங்களுக்கு சொன்ன செய்தி எனக்கு இனம் மதம் பேதம் கிடையாது.நீங்கள் ஒன்றுபட்டு அரசின் குடிமக்ககளாக செயல்பட்டால் நாங்கள் உங்களை வந்தடைவதில் கடும் சிரமப் படுவோம் என்ற செய்தியை தொட்டும் தொடமலும் சொல்கின்றது.
No comments:
Post a Comment