தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் ஜனாதிபதி ஒரு தலைபட்சமாக செயற்படக்கூடாது - பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 27, 2020

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் ஜனாதிபதி ஒரு தலைபட்சமாக செயற்படக்கூடாது - பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதங்கம்

பாறுக் ஷிஹான்

மரண தண்டனை விதிக்கப்பட்ட மேஜர் சுனில் ரத்னாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்க முடியுமென்றால், ஏன் ஆனந்த சுதாகரன் உட்பட ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாதெனவும் ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும் கரிசனை செலுத்த வேண்டுமெனவும் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட மேஜர் சுனில் ரத்னாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்களான அந்தோனி சுதர்ஷன் மற்றும் நாகேந்திரன் தர்ஷினி இவ்வாறு தத்தமது கருத்தினைத் தெரிவித்தனர்.

கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்ட இராணுவ மேஜருக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியுமானால், எந்தவித விசாரணையுமின்றி நீண்ட காலமாகத்தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஏன் விடுதலையளிக்க முடியாது.

நீண்ட காலமாக எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள மக்களுக்கு மாத்திரம் ஜனாதிபதியல்ல. இந்நாட்டில் வாழும் அனைவருக்கும் ஜனாதிபதி என்ற அடிப்படையில் செற்பட வேண்டும்.

உலகில் வேகமாகப்பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பல உயிரிழப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்தும் ஜனாதிபதி கரிசணையெடுக்க வேண்டும்.

தாய், தந்தைகள் சிறையில் வாடும் போது பிள்ளைகள் இந்த நோய்க்கு மத்தியில் பல அவஸ்தைக்குள்ளாகின்றனர். அவர்களது பொருளாதாரம் குறித்த விடயங்களும் கேள்விக்குறியாக இருக்கின்றது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மனைவியை இழந்து நிற்கும் ஆனந்த சுதாகரன் உட்பட ஏனைய அரசியல் கைதிகளின் குடும்ப நிலையும் இதேதான். அவர்களது பிள்ளைகளைப் பராமரிப்பதற்கு யாருமற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இராணுவ மேஜர் சுனில் ரத்நாயக்க அவர்களின் பிள்ளைகள் கூட இதே நிலையில் தான் தந்தையின் வருகைக்காக ஏங்கிக் கொண்டிருந்தனர். இதே நிலையில் தான் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களிலும் இருக்கின்றது.

ஜனாதிபதி அவசரகால நிலையைக்கருத்திற் கொண்டும் நீண்ட காலமாக விசாரணையிலிருக்கும் அரசியல் கைதிகள் உட்பட ஏனைய தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment