ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க சிறைச்சாலைகள் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நேற்று (14) மாலை மேற்கொண்ட வைத்தியப் பரிசோதனைகளின் பின்னர் அவர் சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நேற்றிரவு அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்தார்.
திடீர் சுகவீனம் காரணமாக அவர் இவ்வாறு சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க நேற்று (14) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து குற்றப் புலனாய்வு பிரிவினர் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது.
கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மிக் (MiG) விமான கொள்வனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதோடு, அவருக்கு பிடியாணை உத்தரவும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment