யாழ். பல்கலையில் மீண்டும் பகிடிவதை - 'ராக்கிங்'கில் ஈடுபட்ட கலைப்பீட மாணவன் அதிகாரிக்கு மிரட்டல் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 15, 2020

யாழ். பல்கலையில் மீண்டும் பகிடிவதை - 'ராக்கிங்'கில் ஈடுபட்ட கலைப்பீட மாணவன் அதிகாரிக்கு மிரட்டல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பாலியல் பகிடிவதை விவகாரம் அடங்கும் முன்னரே மற்றொரு சம்பவம் பதிவாகியுள்ளது. பகிடிவதை காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட புதுமுக மாணவர் ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழக்க முயற்சித்த நிலையில், அதிகாரிகளின் தலையீட்டால் குறித்த மாணவன் காப்பாற்றப்பட்டார்.

பகிடிவதையில் ஈடுபட்ட கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் மாணவனிடம் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரி, மாணவனால் மிரட்டப்பட்டதையடுத்து அவர் பதவி விலகல் கடிதத்தை யாழ். பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரியிடம் கையளித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட புதுமுக மாணவனை, மூத்த மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த புதுமுக மாணவன் தான் உயிரிழக்கப் போவதாக சக மாணவர்களிடம் நேற்றுமுன்தினம் கூறியுள்ளார். இந்தத் தகவலை சக மாணவர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் விசாரணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டார். விசாரணையின்போது, புறொக்டரை (பிரதான முறைப்பாட்டு அதிகாரி) மிரட்டும் வகையில் அவர் நடந்து கொண்டுள்ளார்.

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் மாணவனின் அதட்டலையடுத்து தான் பதவியிலிருந்து விலகுவதாக, புறொக்டர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரிக்கு நேற்றுமுன்தினம் மாலையே கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து நேற்று மாலை, மிரட்டிய மாணவனை அழைத்து, புறொக்டரிடம் மன்னிப்புக் கோருமாறு தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி கோரினார். மாணவன் மன்னிப்புக் கோரியதையடுத்து, புறொக்டர் தனது பதவி விலகல் கடிதத்தை மீளப் பெற்றுள்ளார். மாணவனுக்கு எந்தவொரு தண்டனையும் விதிக்கப்படவில்லை.

Ariyakumar Jaseeharan

No comments:

Post a Comment