புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்குகளை சேகரிக்கும் நோக்கிலே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் கூட்டு சேர்ந்துள்ளாரே தவிர அவர் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தத்தில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க நேற்றுத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதால் மட்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாத்துவிட முடியாதென்றும் அவர் கூறினார்.
ராஜகிரியவிலுள்ள ஒன்றிணைந்த ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அவர் மேலும் கூறியதாவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் அவர் எதற்காக தலையிடுகின்றார் என்பதை நாம் சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். இடதுசாரிகளுடனேயே சுதந்திரக் கட்சி தனது பயணத்தை ஆரம்பித்தது.
இடதுசாரிகளின் சக்தி மற்றும் இடதுசாரிகளின் கோட்டையை நிராகரித்துக் கொண்டு சுதந்திரக் கட்சி ஒருபோதும் பயணம் செய்ததில்லை.
கடந்த காலங்களில் நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருந்தபோதும் இடதுசாரி கோட்டையையே ஆதரித்திருந்தோம். என்றாலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார், சுதந்திரக் கட்சி ஸ்தாபகருடைய குடும்பத்திலிருந்து வந்தவர் மட்டுமன்றி கட்சிக்கு தலைமைத்துவம் வகித்தவர்.
இந்நிலையில் அவர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதன் மூலம் எதிர்பார்த்த விடயங்களை பெற்றுக்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குரிய விடயமே.
சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை விட்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதன் பின்னணியில் மேற்குலக நாடுகளின் செல்வாக்கு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்குகளை சேகரித்துக் கொடுப்பதே சந்திரிக்கா அம்மையாரின் ஒரே நோக்கமே தவிர அவர் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தத்தில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றார்.
No comments:
Post a Comment