முசோலினி போன்றதொரு சர்வாதிகாரியை முன்னிறுத்தி ஜனநாயகத்திற்கு எதிராக அணிதிரண்டுள்ள சக்திகள் வேண்டுமா அல்லது ஜனநாயகத்தை பாதுகாத்து முன்னோக்கிக் கொண்டுசெல்ல முன்னிலையாகியுள்ள சஜித் பிரேமதாச வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐ.எஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டமைக்கு எதிராக ஒருவார்த்தை கூற அச்சப்படுபவர்கள் தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பயங்கரவாதத் தாக்குதல்களுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதால்தான் கருத்துக்கூற அச்சப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார்.
புதிய அரசியல் கூட்டணியான ஜனநாயக தேசிய முன்னணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று கொழும்பு தாஜ் சமுதிரா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், வெள்ளை வேன் கலாசாரத்தை நிறுத்தியவர்களும், ஊடகவியலாளர் எக்னெலிகொட போன்றோர் கடத்தப்படுவதை நிறுத்தியவர்களும், பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு விநோதத்தில் ஈடுபட்ட யுகத்தை நிறுத்தியவர்களும், உண்மையான ஜனநாயகத்தை நிறுவியவர்களும், உயர் நீதிமன்ற நீதியரசர் விரட்டியக்கப்பட்டதை தடுத்தவர்களுமே ஜனநாயக தேசிய முன்னணியில் இணைந்துள்ளனர்.
கடந்த ஐந்து வருடங்களில் சுதந்திரமான சமூகத்தை உருவாக்கியுள்ளோம். சட்டத்துக்கு அப்பால் எவரையும் பொலிஸாரால் கொண்டுசெல்ல முடியாது. வெள்ளை வேன்கள் எங்கும் வருவதில்லை. ‘சுவசெவன அம்பியூலன்ஸ்கள்’ மாத்திரமே அனைத்து இடங்களுக்கும் வருகின்றன. ஊடகவியலாளர்கள் எவரும் காணாமலாக்கப்படுவதில்லை. தினமும் என்னைதான் ஊடகவியலாளர்கள் விமர்ச்சிக்கின்றனர். அவ்வாறான சமூகத்தைதான் உருவாக்கியுள்ளோம்.
இதனை முன்னோக்கியே கொண்டுசெல்ல வேண்டும். ஆனால், இதில் இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் சிலர் பேசுகின்றனர். சமூக ஜனநாயகத்தை ஒழிக்கப் பார்க்கின்றனர். தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பதால் சுதந்திரமான சமூகமொன்று அவசியமில்லையெனவும் சர்வாதிகாரி ஒருவர்தான் அவசியமெனவும் சிலர் கூறுகின்றனர். இவற்றிலிருந்து சமூகத்தை பாதுகாக்க வேண்டும். ஜனநாயக தேசிய முன்னணிதான் ஜனநாயகத்தை பாதுகாக்க உருவாகியுள்ள அரசியல் முற்போக்குச் சக்தியாகும்.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுத் தாக்குதல்களை நடத்திய அனைவரும் குறுகிய காலத்திற்குள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டே இந்த அனைத்து விடயங்களையும் செய்தோம். வெள்ளை வேன்களும் வேறுவிதமான நடவடிக்கைகளும் இதற்கு அவசியமாகவிருக்கவில்லை.
பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளாகினோம். இவற்றை கண்டுகொள்ளாது எமது கடமையை செய்தோம். தேசிய சகவாழ்வுக்கு பாதகமாக இருக்கும் அடிப்படைவாதக் குழுக்களை ஒழிப்பதில் உறுதியாகவிருந்தோம்.
இதேவேளை, ஐ.எஸ் அமைப்பை ஒழிப்பதற்கு சர்வதேச ரீதியில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்தோம். ஐ.எஸ். அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டமை தொடர்பில் நான் விசேட அறிவிப்பொன்றையும் விடுத்திருந்தேன். முஸ்லிம் தலைவர்களும் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
ஆனால், நாட்டின் தேசியப் பாதுகாப்பை பொறுப்பேற்கவுள்ளவர்களுக்கு அவ்வாறு அறிவிப்பொன்றை வெளியிட முடியாதுள்ளது. ஏன் அச்சம்? என அவர்களிடம் கேட்க விரும்புகிறேன். ஏன் இது தொடர்பில் கருத்துக்களை கூற முடியாதுள்ளது? அவர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கக்கூடும். அதனால்தான் கேள்வியை எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு நாம் பெற்றுக்கொண்ட ஜனநாயக வெற்றியை முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் இருள் சூழ்ந்த யுகத்தை நோக்கி செல்ல நேரிடும். இவற்றுடன் அபிவிருத்திகளையும் செய்து வருகின்றோம். வறுமையை ஒழிக்க வேண்டும்.
ஜனநாயகத்திற்கு எதிராக முசோலினி போன்றதொரு சர்வாதிகாரிவை முன்னிறுத்தி அணிதிரண்டுள்ளவர்கள் வேண்டுமா அல்லது பெற்றுக்கொண்ட ஜனநாயகத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முன்னிலையாகியுள்ள சஜித் பிரேமதாச வேண்டுமா என்பதை மக்கள் முடிவுசெய்ய வேண்டும் என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment