(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்திட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ' இந்தியாவினால் இலங்கையில் ஆயுத களஞ்சியசாலையை உருவாக்க முடியும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை பகிரங்கப்படுத்துவதில் அரசாங்கம் ஏன் பின்வாங்குகிறது. இந்த வாரத்திலாவது ஒப்பந்தங்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்திறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டும்போது பாராளுமன்றத்தின் ' லொக்கா' என்று குறிப்பிட்டுக் கொள்ளும் நபர் எம்மீது போலியான பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். பாராளுமன்றத்தில் இருந்துகொண்டு போலியான குற்றச்சாட்டுக்களை குறிப்பிடாமல், உரிய நடவடிக்கை எடுங்கள் நாங்களும் பார்த்துக் கொள்கிறோம்.
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் தன்னிச்சையாக செயற்படும் பி.ஆர். பற்றி குறிப்பிட்டார். இந்த பி.ஆர். என்பவரால்தான் இந்த அரசாங்கம் வெகுவிரைவில் வீழ்ச்சியடையும் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன். இந்த பி.ஆர். என்பவர் தன்னிச்சையாகவும், மூர்க்கத்தனமாகவும், முறையற்ற வகையில் செயற்படுகிறார்.
பாராளுமன்றத்தின் பேச்சுரிமையையும் தனக்கு ஏற்றாட்போல் முடக்குகிறார். இவ்வாறான நிலை கடந்த காலங்களில் இருக்கவில்லை. பாராளுமன்ற செயலாளர் பிரிவும் இவரது முறையற்ற செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த அரசாங்கம் இந்தியாவுடன் கடந்த ஏப்ரல் மாதம் முதற்பகுதியில் 7 ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டது. அதேபோல் சீனாவுடனும் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் ஏதும் இதுவரையில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை.
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட 7 ஒப்பந்தங்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அண்மையில் வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார். வெகுவிரைவில் பாராளுமன்றத்தக்கு சமர்ப்பிக்கப்படும் என்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் இதுவரையில் அந்த ஒப்பந்தங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்தியாவுடனான ஒப்பந்தங்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாயின் இந்தியாவின் அனுமதியை பெற வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகிறார். இந்தியாவின் அனுமதியை பெற வேண்டுமாயின் ஒப்பந்தத்தை கைச்சாத்திடாமல் இருந்திருக்கலாம்.
இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்திட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் பிரதான செய்தி வலைத்தளத்தில் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் 'இலங்கையில் ஆயுத களஞ்சியசாலையை இந்தியாவினால் உருவாக்க முடியும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் உண்மைத்தன்மை என்னவென்பதை இந்த பாராளுமன்றம் அறிந்துகொள்ள கூடாதா?
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கு இந்த அரசாங்கம் ஏன் பின்வாங்குகிறது. கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தி எட்கா, சோபா மற்றும் இந்தியாவுடனான பல ஒப்பந்தங்களை கடுமையாக எதிர்த்தது. 'இந்தியாவுடனான திருட்டு ஒப்பந்தங்களை கிழித்தெறிவோம்' என்று நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தீர்கள் இன்று என்ன செய்கின்றீர்கள்.
இந்தியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டாக இருந்து சீனாவுக்கு எதிராக செயற்கின்றன. இந்த நாடுகளுடன் இலங்கை பாதுகாப்பு தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்போது ஏனைய நாடுகளால் அது உன்னிப்பாக பார்க்கப்படும்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் தற்போது முறுகல் நிலை காணப்படுகிறது. இதனால் இலங்கைக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு சொல்வது. இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் இருந்து இலங்கையால் இலகுவில் விலக முடியாது. புலி வாலை பிடித்த கதையாக இது காணப்படுகிறது. ஆகவே இந்தியாவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களை இந்த வாரத்திலாவது அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment