காணியும் நிதியும் வழங்கிய முஸ்லிம்கள் கோயிலையோ இந்துக்களின் தெய்வங்களையோ சேதப்படுத்தினார்கள் என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது - News View

About Us

About Us

Breaking

Monday, September 2, 2019

காணியும் நிதியும் வழங்கிய முஸ்லிம்கள் கோயிலையோ இந்துக்களின் தெய்வங்களையோ சேதப்படுத்தினார்கள் என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது

எஸ்.எம்.எம்.முர்ஷித்

தமிழ் குடியிருப்பு இல்லாத ஜப்பார்திடலில் கோயில் அமைக்க இடம், நிதி வழங்கியமை முஸ்லிம்களின் பெருந்தன்மை என கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் மெளலவி தெரிவித்தார்.

கடந்த 29.08.2019ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற 17வது சபை அமர்வில் கலந்துகொண்டு பிரதேச சபை உறுப்பினர் வை.யோகேஸ்வரனின் கருத்துக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம் எந்த மதத்திற்கும் இனத்திற்கும் எதிரானவர்களல்லர். இன, மத ரீதியான தாக்குதல்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரம், முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல் என்பது இன்று நேற்று தொடங்கியதல்ல. காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாயல் படுகொலை முதல் அண்மைய பள்ளிவாயல் தாக்குதல் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

வாகனேரி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஜப்பார்திடல் பிரதேசம் முழுக்க முஸ்லிம்கள் வாழும் முஸ்லிம்களின் பூர்வீகக்காணிகள் அமைந்துள்ள பிரதேசம். இவ்வாறான தனி முஸ்லிம்கள் வாழும் ஜப்பார்திடல் பிரதேசத்தில் ஒரு தமிழர் குடியிருப்புக்களும் இல்லாத நிலையில், கோயிலுக்கு காணி வழங்கியமையும் அதே கோயிலை புனர்நிர்மானம் செய்ய முஸ்லிம் அமைச்சர் நிதி வழங்கியமையும் முஸ்லிம்களின் பெருந்தன்மை என்பதையும் மற்ற மதங்களை முஸ்லிம்கள் எவ்வளவுக்கு மதிக்கிறார்கள் கெளரவத்தை வழங்குகிறார்கள் என்பதற்கு இதுவொரு நல்ல உதாரணம். இவ்வாறு காணியும் நிதியும் வழங்கிய முஸ்லிம்கள் கோயிலையோ இந்துக்களின் தெய்வங்களையோ சேதப்படுத்தினார்கள் என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதன் பின்னணியில் தமிழ் தரப்பிலுள்ள சிலர் இயங்குகிறார்களா? என்ற சந்தேகம் எழுகின்றது. குறித்த பிரதேசத்திற்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் போன்றோர் தெரிவித்த கருத்துக்கள் சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றது. அத்துடன், இதன் பின்னணியில் டயஸ்போராக்கள் போன்ற வெளிநாட்டு சக்திகளின் பணத்துக்காக இயங்கும் இவ்வாறான சக்திகள் உள்ளார்களா? என சந்தேகிக்க முடிகிறது.

இந்த சபையிலுள்ள தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் ஒரு உடன்பாட்டுக்கு வந்து தீர்வொன்றினைக் காண முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், நள்ளிரவு வேளையில் குறித்த ஆலயத்தின் மீது மனிதக்கழிவுகளை வீசி அசிங்கப்படுத்தும் மனோநிலையில் எந்தவொரு முஸ்லிமும் தயாரில்லை என்பதை தமிழ்த்தரப்பு உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இது இன நல்லுறவைச்சீர்குலைக்கும் சக்திகள் தான் மேற்கொண்டுள்ளார் என்பது தெளிவாகின்றது.

அத்துடன், முழுக்க முழுக்க தமிழர்கள் வாழும் ஒரு பிரதேசத்தில் பள்ளிவாயலொன்றை அமைக்க உங்களால் அனுமதிக்க முடியுமா? அவ்வாறு அனுமதித்தாலும் இவ்வாறு இனவாதம் பேசுகின்ற சக்திகள் அதற்கு அனுமதியளிப்பார்களா? என்பதை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.

சீனிக்காக்கா என்ற முஸ்லிம் சகோதரருக்குச் சொந்தமான காணியை அரச காணியாக அடையாளப்படுத்தி, அத்துமீறி கோயிலுக்கு முன்னர் இருந்த நாற்பது பேர்ச் காணியுடன் மேலும் நாற்பது பேர்ச் காணியை வழங்கியமை கிரான் பிரதேச செயலகத்தின் நிருவாகப் பயங்கரவாதத்தின் உச்சகட்டமாகும்.

அதேநேரம், கிரான் பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட காணிப்பரப்பையும் தாண்டி தனியாருக்குச் சொந்தமான காணியை அடாத்தாகப் பிடித்து சுற்று மதில் அமைக்க நீங்கள் எடுத்த முயற்சியை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

அதேநேரம் கோயிலுக்குரிய காணியை விடுத்து முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஒரு அங்குல காணியையும் அடாத்தாக பிடித்து வேலி அமைக்கவோ உரிமை கொண்டாடவோ ஒரு போதும் நாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை ஆணித்தரமாக சொல்லி வைக்க விரும்புகிறேன் என கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் மெளலவி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment