காணாமல் போனோருக்கான அலுவலகம் என்பது காலம் கடத்தும் செயற்பாடு - தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு பலிக்கடாவாகியுள்ளது - News View

About Us

About Us

Breaking

Sunday, September 1, 2019

காணாமல் போனோருக்கான அலுவலகம் என்பது காலம் கடத்தும் செயற்பாடு - தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு பலிக்கடாவாகியுள்ளது

காணாமல் போனோருக்கான அலுவலகம் என்பது காலம் கடத்தும் செயற்பாடு. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பலிக்கடாவாகியுள்ளது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். 

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் போன உறவுகள் தங்களுக்கு நீதி வேண்டி போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அந்த வகையில் ஓமந்தையிலே இறுதிக்கட்ட போரிலே இதே இடத்திலே வைத்து பல நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்களை சரணடைய சொல்லியும் சரணடைந்தவர்களையும் பேருந்துகளிலும் ஏற்றிக்கொண்டு சென்றவர்கள் இன்றைக்கு 10 வருடங்களைக் கடந்தும் அவர்களுக்கு என்ன நடந்தது என தெரியாது. 

விஷேசமாக இந்த தாய், தகப்பனோடு சேர்ந்து சிறார்களுக்கு கூட இன்றைக்கு 10 வருட காலமாக என்ன நடைபெற்றது என தெரியாது. ஆகவே தற்போது இருக்கக்கூடிய இந்த அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலே இந்த காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறவர்கள் தொடர்பான ஒரு உருப்படியான தீர்வு எதனையும் இதுவரையும் வழங்கவில்லை. 

இவ் அலுவலகத்தின் ஊடாக எந்தவித நீதியையும் பெற்றுக்கொள்ள முடியாது. அதற்கான நஷ்ட ஈட்டை கூட பெற்றுக் கொள்ளமுடியாது. வெறுமனே ஒரு சான்றிதழை மட்டும் பெறுவதற்குரிய இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அலுவலகம் இன்று கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இது காலம் கடத்துகின்ற ஒரு விடயம். சர்வதேச சமூகத்தையும் ஏனையோர்களையும் இதில் காலம் கடத்துகின்ற விடயமாகவே இந்த அரசாங்கம் செய்கின்றது. 

உண்மையிலேயே ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் என்னவென்று கூறினால் இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குரிய அலுவலகம் தொடர்பான ஒரு சட்ட மூலம் பாராளுமன்றத்தில் வரும்‌ பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே இருக்கக்கூடிய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அதாவது என்னை தவிர ஏனைய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் சட்டமூலத்திற்கு ஆதரவாக காணாமல் ஆக்கப்பட்டிருப்பவர்களுக்கான அலுவலகம் வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை சட்ட மூலமாக ஆதரித்திருக்கிறார்கள். 

பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களோடு காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறவர்களுக்கான இந்த அலுவலகம் தொடர்பான சாதக, பாதக நிலைமைகள் என்ன என்பதை பகிர்ந்து கொள்ளாமல் அவசர அவசரமாக அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக கொண்டுவரப்படுகின்ற இந்த சட்டமூலத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பலிக்கடாவாகியிருக்கின்றார்கள் என்றும் தெரிவித்தார்.

வவுனியா விசேட நிருபர்

No comments:

Post a Comment