தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சௌசவுந்தரராஜனை நேற்று (01) மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து தமிழக பா.ஜ.க. பொறுப்பில் இருந்து தமிழிசை விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கடந்த 2014ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து அவரது பதவிக்காலம் முடிந்த நிலையில் அவரே மீண்டும் அப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் முடிவடைகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக மகளிரணித் தலைவர் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், எதிர்பாராத நேரத்தில் இந்த பதவி எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இது கடின உழைப்புக்கு பாஜக நிச்சயம் அங்கீகாரம் தரும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ஆகியோர் மீண்டும் நிரூபித்துள்ளனர்.
இதற்காக அவர்களுக்கும் செயல் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கும் நன்றி. தமிழக பாஜக தொண்டர்கள் மற்றும் அனைவருக்கும் நான் இந்த வெற்றியை சமர்பிக்கிறேன். தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கடுமையான உழைப்பிற்கு பா.ஜ.க. அங்கீகாரம் தரும் என்பதை பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் நிரூபித்துள்ளனர். எனக்கு ஆதரவு அளித்த தமிழக அரசியல் தலைவர்கள், குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவித்து கொள்கிறேன். பா.ஜ. தலைவராக இருந்த எனக்கு அதை விட மிகப்பெரிய பதவியை கட்சி தலைமை கொடுத்துள்ளது என குறிப்பிட்டார்.
தெலுங்கானா உட்பட 5 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமனம் செய்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. மத்திய அரசு சார்பில் நேற்று வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது தமிழக பாஜக தலைவராக இருந்த டொக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
கேரளா மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதேபோல் ராஜஸ்தான் மாநில ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டார். இமாசலப்பிரதேசம் மாநில ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர ஆளுநராக பகத் சிங் கோஷ்பார் நியமிக்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது
No comments:
Post a Comment