டிசம்பர் மாதம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில் அதற்குப் பாதகம் ஏற்படாத வகையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்றைய தினம் சில தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளுக்கிணங்க, டிசம்பர் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால் அது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு பாதகமாக அமையுமா என்பது தொடர்பில் ஆணைக்குழுவின் முக்கியஸ்தர் ஒருவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
டிசம்பர் 2ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கான நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தல் பரீட்சைக்குத் தடையாக அமையாது எனவும் ஆணைக்குழுவின் முக்கியஸ்தர் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட்டு ஒக்டோபர் நடுப்பகுதியில் வேட்பு மனுத்தாக்கல் இடம்பெறலாம். அதனையடுத்து நவம்பர் 15-30 க்கு இடைப்பட்ட காலப் பகுதியிலுள்ள சனிக்கிழமைகளில் வாக்களிப்பு இடம்பெறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை 2018ஆம் வருடத்துக்கான தேர்தல் இடாப்பிற்கு இணங்கவே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளது. தேர்தலில் தபால் மூல வாக்களிப்பில் பங்கேற்போர் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment