ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, முஸ்லிம்களின் வாக்குப் பலத்துடன் ஆட்சிக்கு வந்தால், நிச்சயம் ஆயிரம் பேருக்கு மௌலவி ஆசிரியர் நியமனம் பெற்றுக் கொடுக்கப்படும் என்று, உலமாக் கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய கொழும்பு அமைப்பாளர் ஏ.எல்.எம். உவைஸ் ஹாஜியின் ஏற்பாட்டில், பெரமுனவின் மருதானை மத்திய நிலையத்தில் நடைபெற்ற மௌலவி மற்றும் மௌலவியாக்களுடனான கலந்துரையாடலின் போதே, உலமாக் கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மெளலவி முபாறக் இங்கு மேலும் பேசும்போது கூறியதாவது, இந்த நாட்டின் வரலாற்றில் மௌலவி ஆசிரியர் நியமனம் என்பது, இன்று நேற்றையது இல்லை. எனது தந்தையார் கூட மௌலவி ஆசிரியராக இருந்தார் என்பதை வைத்து, இதன் நீண்ட வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடியும்.
1992 ஆம் ஆண்டுக்குப்பின்னர் மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படாதபோது, 2005 இல் உலமாக் கட்சியை நாம் ஆரம்பித்து, அதற்கான பாரிய போராட்டம் நடத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூலம் 2010 இல் 150 மௌலவிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்க வைத்தோம். ஆனாலும், மௌலவிமார் பெரும்பாலும் எமக்கு சகல தேர்தல்களிலும் வாக்களிக்காமல், நன்றி கெட்ட தனமாக நடந்து கொண்டார்கள். இருப்பினும், நாம் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கின்றோம்.
இந்த ஐ. தே. க. அரசு வந்ததும், மௌலவி ஆசிரியர் நியமனத்தை இதோ வழங்கப்போகின்றோம் என்றார்கள். மௌலவிமாரை விண்ணப்பிக்கச்செய்து, அதற்கான விண்ணப்பப் பணத்தை இந்த அரசு சுருட்டிக்கொண்டதுதான் மிச்சம்.
இது பற்றி நாம் கண்டன அறிக்கை விட்டால், உடனே அரசு தரப்பினர் இதோ விரைவில் நியமனம் கிடைக்கும் என்பார்கள். ஆனால், இதுவரையில் எதுவும் நடக்கவில்லை.
2006 ஆம் ஆண்டைய தரவுகளின் படி, 635 மௌலவி ஆசிரியர்களுக்கான வெற்றிடம் இருந்தது. இப்போது 2019 ஆம் ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெற்றிடம் உள்ளது. இவற்றை வென்றெடுக்க, சிவில் அமைப்புக்களால் முடியாது. மாறாக, அரசியல் கட்சிகளினாலேயே முடியும்.
அந்த வகையில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது ஜன பெரமுனவைப் பலப்படுத்த மௌலவிமார் முன் வருவதுடன், முஸ்லிம்களின் வாக்குகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு பகிரங்கமாக முன் வர வேண்டும். அவ்வாறு முன் வந்தால், இந்த அரசு விழித்துக்கொண்டு இந்நியமனத்தைக் கொடுக்கும். அல்லது மஹிந்த தலைமையிலான அடுத்த அரசில் நாம் இதனைப் பெறமுடியும்.
அவ்வாறின்றி, மௌலவிமார் வீட்டுக்குள் இருந்து கொண்டிருந்தால், ஆசிரியர் நியமனம் கூரையைப் பொத்துக்கொண்டு வராது.
50 ரூபா உயர்வுக்காக நம் தமிழ் சகோதரர்கள், வீதியில் இறங்கிப் போராடுகின்றார்கள். உலமாக்களை வீதியில் இறங்கும்படி நாம் சொல்லவில்லை. அரசியல் கட்சி மயப்படுத்தப்பட்டு உலமாக் கட்சி, பங்காளிக் கட்சியாக உள்ள பொது ஜன பெரமுனவை ஆதரிப்பதே மாற்று வழியாகும். ஒன்று மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். அதுதான், மஹிந்த ராஜபக்ஷ ஒன்றைச் சொன்னால் செய்து காட்டுபவர்.
அவர் ஒரு போதும் பொய் உரைக்க மாட்டார். மஹிந்த எப்போதும் நன்றி உள்ளவர். நல்ல உள்ளம் கொண்டவர் என்றார்.
ஐ.ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment