வீடில்லாத அனைவருக்கும் செமட்ட செவண வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை வழங்க திட்டங்களை வகுத்திருக்கிறோம் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மட்டு. மாவட்ட பட்டிப்பளை செயலகப் பிரிவுக்குட்பட்ட நாற்பது வட்டை தாந்தாமலையில் 269 ஆவது குமரன் குடியிருப்பு மற்றும் மாவடிமுன்மாரியில் 270 ஆவதாக நிர்மாணிக்கப்பட்ட காளிகாபுரம் ஆகிய வீட்டுத் திட்ட வீடுகளை பயனாளிகளுக்கு நேற்று முன்தினம் (01) கையளிக்கும் நிகழ்வில் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், எமது நாட்டில் இருபது ஆயிரம் மாதிரிக் கிராமங்களை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம். இவற்றை நான்கு படிமுறைகளாக முன்னெடுக்கவுள்ளோம்.
முதலாவது படிமுறையில் 2500 வீட்டுத் திட்டங்களையும் இரண்டாவது படிநிலையில் 5000 வீட்டுத் திட்டங்களையும் மூன்றாம் கட்டத்தில் 10,000 வீட்டுத் திட்டங்களையும் இறுதியாக 2500 வீட்டுத்திட்டங்களையுமாக 2025 ஆம் ஆண்டுக்குள் 20,000 வீட்டுத் திட்டங்களை உருவாக்கி வீடுகளின்றி தவிக்கும் ஏழைகளுக்கு வழங்கி வைக்கவுள்ளேன்.
காட்டுமிராண்டித்தனமாக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அத்துமீறல்கள் இன்று இப்பிரதேசத்தில் பார்க்க கிடைத்தது. இவைகளின் பின்னணியிலுள்ளவர்களை கண்டறிந்துள்ளோம். எனது உருவப்படம் அடங்கிய பதாதைகளை கிழித்து நாசப்படுத்தியிருக்கிறார்கள்.
நாங்கள் வந்தால் நாட்டை கட்டியெழுப்பி தேசிய பாதுகாப்பை தருவோம் என பேசுகிறார்கள். ஆனால் இந்தப் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு கட்டவிழ்த்துவிடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான இவ்வாறான செயற்பாடுகளை செய்பவர்களால் நாட்டையும் நாட்டு மக்களையும் எவ்வாறு பாதுகாக்க முடியும்.
ஏழை மக்களின்பால் கொண்டுள்ள விருப்பு, மோகம் என்பவற்றை ஒருபோதும் நான் நிறுத்தப்போவதில்லை, எனது முகத்தை நீங்கள் கிழித்துவிடலாம் ஆனால் சஜித் பிரேமதாஸவின் செயற்பாடுகள், எண்ணக்கருக்கள் ஒரு காலமும் முடக்கப்படமாட்டாது.
பதாதையிலுள்ள எனது முகத்தை கிழிப்பதனால் என்னுடைய அதீத செயற்பாடுகளை நிறுத்த முடியாது என அவர்களிடம் கூற விழைகிறேன்.
இந்த நாசகர செயல்களை செய்தவர்கள் இந்தப் பகுதியில்தான் இருப்பார்கள். இவர்கள்தான் கடந்த காலங்களில் இந்தப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு எதிராக கூலிப்படையாக செயற்பட்ட கொலைகாரக்கூட்டம்.
நாட்டிலுள்ள மக்களையும் சாந்தி சமாதானத்துடன் தேசிய பாதுகாப்பு உட்பட அபிவிருத்தியினை உங்களுக்கு தருவது வேறு யாருமல்ல சஜித் பிரேமதாஸ என்பதை கூறிக்கொள்கின்றேன் என்றார்.
மண்டூர் நிருபர்
No comments:
Post a Comment