வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிப் பாடசாலையின் பிரதான சிறை அதிகாரி (Chief Jailor) கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஓகஸ்ட் 03 ஆம் திகதி அம்பலாங்கொடை, குலிகொட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்,44 வயதான பிரதான சிறை அதிகாரி திலிண ருவன் திஹார ஜயரத்ன சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சி.சி.ரி.வி. கமெரா காட்சி மற்றும் தொலைபேசி அழைப்புகளை வைத்து மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சந்தேகநபர் நேற்று (02) பிற்பகல் 3.55 மணியளவில் அம்பலாங்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குலிகொட பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைக்கு அமைய ரி56 வகை துப்பாக்கி, 12 துப்பாக்கி ரவைகளைக் கொண்ட மகசீன் மற்றும் குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளொன்றையும் கைப்பற்றியுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ரி56 வகை துப்பாக்கியை பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் 42 வயதுடைய அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த மற்றைய சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சந்தேகநபர்கள் இருவரையும் இன்று (03) பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment