இரு தலைவர்களும் சந்திப்பு - நான்கு முக்கிய ஒப்பந்தங்களும் கைச்சாத்து - மாலைதீவு பாராளுமன்றில் பிரதமர் ரணில் இன்று உரை - News View

About Us

About Us

Breaking

Monday, September 2, 2019

இரு தலைவர்களும் சந்திப்பு - நான்கு முக்கிய ஒப்பந்தங்களும் கைச்சாத்து - மாலைதீவு பாராளுமன்றில் பிரதமர் ரணில் இன்று உரை

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நேற்று அங்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

பிரதமருக்கும் மாலைதீவு ஜனாதிபதிக்குமிடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றதோடு நான்கு முக்கிய ஒப்பந்தங்களும் கைசாத்திடப்பட்டுள்ளன.

இது தவிர இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய புதிய துறைகள் தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் ஆராய்ந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழு நேற்றுக் காலை மாலைதீவுக்கு பயணமானது.

மாலே வெலனா விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமர் தலைமையிலான தூதுக் குழுவினரை அந்நாட்டு வௌியுறவு அமைச்சர் அப்துல்லா சஹீட் வரவேற்றார்.

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலியின் அழைப்பின் பேரில் மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர், மாலே வெலனா விமான நிலையத்தில் இருந்து விசேட வாகன பவனிமூலம் மாலே 'ஜனரஜ' சதுக்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு பிரதமர் அடங்கலான தூதுக் குழுவினரை மாலைதீவு ஜனாதிபதி மற்றும் அவரது பாரியாரும் பெருவரவேற்பளித்தார்கள்.

இதனையடுத்து இலங்கை தூதுக்குழுவினர் அந்நாட்டு ஜனரஜ சதுக்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு அங்கு பிரதமருக்கு அணிவகுப்பு மரியாதையும் பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

பிரதமருக்காக அந்நாட்டு இராணுவம் மரியாதை அணிவகுப்பு நடத்தியதோடு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு கலாசார முறைப்படி இலங்கை தூதுக் குழு ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதமரின் பாரியார் மைத்ரி விக்கிரமசிங்க, அமைச்சர்களான வஜிர அபேவர்தன, ரவூப் ஹக்கீம், தயா கமகே, ராஜாங்க அமைச்சர் அனோமா கமகே, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மாலைதீவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் அசோக்க தோரதெனிய, பிரதமரின் விசேட உதவியாளர் சென்ட்ரா பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பையடுத்து நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

விஸா வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர ​அபேவர்தனவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சரும் கைச்சாத்திட்டனர். விஸா கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பிரதமர் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

அடுத்து உயர் கல்வி மற்றும் நீர்வழங்கல் தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தத்தில் உயர் கல்வி மற்றும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் மாலைதீவு உயர் கல்வி அமைச்சர் இப்ராஹிம் ஹசனும் கைச்சாத்திட்டனர்.

சமூக பாதுகாப்பு தொடர்பிலான ஒப்பந்தத்தில் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே மற்றும் மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

தொழில் பயிற்சி மற்றும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கைக்கான உயர் ஸ்தானிகள் தோரதெனிய மற்றும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.

மாலைதீவு சென்றுள்ள பிரதமர் இன்று நடைபெறும் நான்காவது இந்து சமுத்திர மாநாட்டிற்கு தலைமைதாங்குவார்.

மாலைதீவு பாராளுமன்றத்திலும் அவர் இன்று உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் தலைமையிலான இலங்கை தூதுக் குழுவின் வருகையை முன்னிட்டு அங்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

No comments:

Post a Comment