ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68வது வருடாந்த மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று நடைபெறுகிறது. சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில் கட்சியின் எதிர்கால நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கொள்கைத் திட்டமும் வெளியிடப்படவுள்ளது.
'சரியான பக்கத்துக்கு தீர்மானம்' என்ற தொனிப்பொருளில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில் 'சுனில ஜனவாத' என்ற தலைப்பில் கொள்கைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக சுதந்திரக் கட்சியின் பிரதம செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்தார்.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தயாசிறி ஜயசேகரவுடன், ஐ.ம.சு.மு செயலாளர் மஹிந்த அமரவீர, சு.க தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, சு.கவின் உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
சுதந்திரக் கட்சி மாநாட்டில் 15,000ற்கும் அதிகமான கட்சித் தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கின்றோம். இவர்களுக்கு உள்ளக அரங்கத்தில் இடமில்லாவிட்டாலும் வெளியே அதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடு முகங்கொடுத்திருக்கும் நிலையில் இந்த மாநாடு சுதந்திரக் கட்சிக்கு திருப்பு முனையாகவிருக்கும். கட்சியை அடிமட்டத்தில் பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த மாநாடானது எதிர்காலத்திட்டத்தை சகலருக்கும் கொண்டுசேர்ப்பதாக அமையும்.
பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாகத் தயாரிக்கப்பட்டுள்ள 'சுனில ஜனவாத' என்ற பெயரிலான கொள்கைத் திட்டம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்றும், சுதந்திரக் கட்சி பயணிக்க வேண்டிய எதிர்காலப் பாதை தொடர்பில் மாநாட்டில் தெளிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
68 வருடங்களுக்கு முன்னர் செப்டெம்பர் 2ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உதயமாகியிருந்தாலும், மாநாட்டை செப்டெம்பர் 3ஆம் திகதியே நடத்துகின்றோம். மாநாட்டுக்கான உள்ளரங்கத்தைப் பெற்றுக் கொள்வது மற்றும் பாடசாலைகள் திங்கட்கிழமை (நேற்று) ஆரம்பமாவதை கவனத்தில் கொண்டே 3ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்திருந்ததாக ஐ.ம.சு.முவின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சி பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது. இந்த சவால்களிலிருந்து கட்சியை மீட்டு மீண்டும் பலமான நிலைக்குக் கொண்டுசெல்வதற்கான திட்டங்களைத் தயாரித்துள்ளோம். இதற்காக தொகுதி அமைப்பாளர்களை நியமித்து கிராம மட்டத்தில் கட்சியை கட்டியெழுப்பி வருகின்றோம் என்றும் கூறினார்.
மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment