நீண்ட காலமாக இழுபறியில் இருந்துவரும் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தும் விதமாக சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம். ஹனீபா தலைமையில் சாய்ந்தமருது சுயேச்சைக்குழு உறுப்பினர்கள், ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபை, வர்த்தக சங்கம், புத்தி ஜீவிகள், கொழும்பு போரம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு கடந்தவாரம் கொழும்பில் பல்வேறு தரப்பினருடன் பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
அதன்போது, விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுடனான சந்திப்பு 24-.07.2019 மாலை 3.30 அளவில் பத்தரமுல்லையில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம் ஹரீஸ், ஏ.எல்.எம். நஸீர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தை ஆரம்பித்து பேசிய அமைச்சர், எல்லைப் பிரிப்புகள், மீளமைப்புகள் தொடர்பில் நீண்ட விளக்கம் ஒன்றை வழங்கிவிட்டு, உங்களது எல்லைப் பிரச்சினையும் தீர்க்க முடியும் என்றார்.
அப்போது, சாய்ந்தமருது எல்லைகளில் எந்தவித எல்லைப் பிரச்சினைகளும் இல்லை. அதன் எல்லைகள் தெளிவாக உள்ளன. தற்போது சபையைப் பிரகடனப்படுத்த வேண்டியதே பாக்கியுள்ளது என்று பங்குபற்றிய குழுவினரால் தெளிவுபடுத்தப்பட்டது.
குழுவினரால் தெரிவிக்கப்பட்ட விடயங்களை ஆமோதித்த ஹரீஸ், சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் கல்முனை விவகாரத்துடன் சேர்த்துத்தான் இதனையும் முடிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment