கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதற்கு அனைத்து தமிழர்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். கல்முனை வாழ் தமிழ் மக்களின் முப்பது வருடகால நியாயமான பிரதேச செயலகம் தரம் உயர்த்தும் விடயத்திற்கு என்னாலான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கத்தயாராகவுள்னே.
இவ்வாறு கல்முனை ஸ்ரீ சுபத்திராராமய மஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரன்முதுகல சங்கரட்ண தேரர் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் கூட்டம் கல்முனை கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. தமிழர் மகா சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்முனை பிரதேச தமிழ் சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள், கல்விமான்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேசிய தேரர், நான் கல்முனைக்கு வந்து 15 வருடங்களாகின்றது. கல்முனை வாழ் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி எனக்கு நன்கு தெரியும். அதிலும் வடக்கு உப பிரதேச செலயலகம் தரம் உயர்த்தலுக்காக கடந்த 30 வருடங்களாக அம்மக்கள் நடத்தும் போராட்டங்கள் பற்றியும் தெரியும்.
நிதி, காணி அதிகாரங்களுடன் தமிழ் கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கே இப்பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துமாறு கேட்கின்றனரே தவிர முஸ்லிம் அரசியல்வாதிகள் சொல்வது போன்று பிரிவினைக்காக அல்ல.
தெற்கில் இருக்கும் அரசியல்வாதிகள் கல்முனைக்கு வருகை தந்து இங்குள்ள தமிழ் கிராமங்களின் நிலையை நேரில் பார்க்க வேண்டும். கல்முனையில் வசிக்கும் தமிழ் சிங்கள மக்களைப் பற்றி சிந்திப்பதற்கு எவரும் இல்லை.
கல்முனை சிங்கள மகா வித்தியாலயம் எவ்வித அபிவிருத்தியும் இன்றியுள்ளது. பௌத்த விகாரை கூட அபிவிருத்தி செய்யப்படவில்லை. இங்கு வருகின்ற நிதி ஒரு இனத்தை மட்டும் சென்றடைகின்றது.
நான் யாருக்கும் பயப்படுவதில்லை. உண்மையைத்தான் பேசுகின்றேன். உண்மை பேசினால் சிலருக்கு கோபம் வருகின்றது. நான் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் தமிழ், முஸ்லிம்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் முஸ்லிம் அரசியல்வாதிகள் அறிக்கைகள் விடுகின்றனர்.
இந்நாட்டில் பௌத்த மதத்தலைவர் என்ற வகையில் அதுவும் கல்முனையில் உள்ள பௌத்த விகாரைக்கு பொறுப்பானவன் என்ற வகையில் மக்களின் பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து வைக்கின்ற செயற்பாட்டிலே ஈடுபடுகின்றேன் என்றார்.
பாண்டிருப்பு நிருபர்
No comments:
Post a Comment