தேர்தல் கூட்டணி அமைப்பதில் ஐ.தே.வுக்குள் கருத்து முரண்பாடு - முழுமையான அதிகாரம் ஐ.தே.க வசமே இருக்க வலியுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Friday, August 2, 2019

தேர்தல் கூட்டணி அமைப்பதில் ஐ.தே.வுக்குள் கருத்து முரண்பாடு - முழுமையான அதிகாரம் ஐ.தே.க வசமே இருக்க வலியுறுத்தல்

புதிய கூட்டணியை அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் ஏற்பட்டுள்ளதுடன், புதிய கூட்டணியின் முழுமையான அதிகாரம் ஐ.தே.க வசமே இருக்க வேண்டுமென அக்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். 

கூட்டணிக்கான உடன்படிக்கையை எதிர்வரும் 5ஆம் திகதி கைச்சாத்திட வேண்டாமெனவும், காலி முகத்திடலில் இலட்சக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் ஜனாதிபதி வேட்பாளரை அறிமுகப்படுத்த வேண்டுமெனவும் பிரதமரும், கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு, ஐ.தே.கவின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். 

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்றுக் காலை அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது பிரதமர் புதிய கூட்டணி மற்றும் 5ஆம் திகதி கைச்சாத்திடும் உடன்படிக்கை தொடர்பில் அறிவிப்பை விடுத்து கூட்டணியின் யாப்பை மத்திய செயற்குழுவுக்கு சமர்ப்பித்தார். 

இதனை ஆய்வுக்கு உட்படுத்திய ஐ.தே.கவின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் யாப்புக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கூட்டணியின் யாப்பின் பிரகாரம் தலைவர் பதவி, ஐ.தே.கவுக்கும் பொதுச் செயலாளர் பதவி கூட்டணிக் கட்சிக்கும் வழங்கப்படவுள்ளது. 

அத்துடன், தலைமைத்துவ சபைக்கு அதிகளவான அதிகாரம் கிடைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.தே.க உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனை செவிமடுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாப்பில் திருத்தம் செய்ய வேண்டிய விடயங்களை முன்மொழியுமாறும் 5ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் மத்திய செயற் குழுவைக் கூட்டி தீர்மானிப்போம் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன், 5ஆம் திகதி கூட்டணி ஒப்பந்தத்தை கைச்சாத்திட வேண்டாம் எனவும், காலி முகத்திடலில் கட்சி ஆதரவாளர் மத்தியில் ஜனாதிபதி வேட்பாளரை அறிமுகப்படுத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போமென ஐ.தே.கவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட பலர் வலியுறுத்தியுள்ளனர். எனினும், சில உறுப்பினர்கள் திட்டமிட்டப்படி 5ஆம் திகதி கூட்டணி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட வேண்டுமென கூறியுள்ளனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு வெளியாகியதால் கூட்டணி உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் எவ்வித இணக்கப்பாடும் இன்றியே நேற்றைய ஐ.தே.கவின் மத்திய செயற்குழுக் கூட்டம் நிறைவடைந்துள்ளது. எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் ஐ.தே.கவின் மத்திய செயற்குழு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment