பயங்கரவாதத்துடன் தொடர்பானோரை கைது செய்ய சட்ட மா அதிபரின் ஆலோசனை தேவையில்லை - சஹ்ரானை கைது செய்ய பயங்கரவாத தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுக்கவில்லை - News View

About Us

About Us

Breaking

Friday, August 2, 2019

பயங்கரவாதத்துடன் தொடர்பானோரை கைது செய்ய சட்ட மா அதிபரின் ஆலோசனை தேவையில்லை - சஹ்ரானை கைது செய்ய பயங்கரவாத தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுக்கவில்லை

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தமக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி சஹ்ரானை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்வதற்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை எதிர்பார்த்திருக்க வேண்டிய தேவை இல்லையென சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல்கள் தெரிவித்தனர். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் நேற்று (01) சாட்சியமளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல்களான ஹபீஸ் அசாத் நவாவி மற்றும் திலீப் பீரிஸ் ஆகியோரே இதனைத் தெரிவித்தனர். 

சட்ட மா அதிபர் திணைக்களம் சஹ்ரானை கைது செய்யுமாறு ஆலோசனை வழங்காததாலே குண்டு வெடித்திருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கின்றோம். 2017 ஜுன் மாதம் மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினாலும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்னரே சஹ்ரானுக்கு எதிராக இரண்டு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டன. எனினும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி குறிப்பிட்டார்.

காத்தான்குடியில் சாதாரண பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜம்ஆத் அமைப்பினரைக் கைது செய்வது தொடர்பில், அரசியல் ரீதியான தலையீடு இருப்பதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனக்குத் தெரிவித்ததாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் கூறினார்.

தேசிய தௌஹீத் ஜம்ஆத் அமைப்பினர் காத்தான்குடியில் நடத்திய தாக்குதல் தொடர்பிலும், சஹ்ரான் தலைமையிலான குழுவினரின் அடிப்படைவாத செயற்பாடுகள் குறித்தும் காத்தான்குடியைச் சேர்ந்த சஹலான் மௌலவி என்பவர் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் நேரடியாக முறைப்பாடு செய்திருந்தார்.

இதன் பாரதூர தன்மையைக் கருத்தில் கொண்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பொதுமக்கள் முறைப்பாட்டுப் பிரிவு தனியான கோப்பொன்றை திறந்து விசேட கவனம் செலுத்தியதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், இம் முறைப்பாடு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கும், அவரின் ஊடாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கும் எழுத்துமூலம் அறிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். ஐ.சி.சி.பி.ஆரின் கீழ் தேசிய தௌஹீத் ஜம்ஆத் தரப்பினர் தவறிழைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அனுப்பப்பட்ட கோப்பில் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்குப் போதிய வலுவான சாட்சியங்கள் மற்றும் விசாரணை நடத்திய விடயங்கள் எதுவும் உள்ளடக்கப்படவில்லையென பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹபீஸ் அசாத் நவாவி தெரிவித்தார்.

அத்துடன், சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்படும் சகல கோப்புக்களின் பின்னாலும் துரத்திக்கொண்டிருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் சஹ்ரானின் உரைகள் எனக் கூறி அனுப்பப்பட்டிருந்த சீடிக்கள் தமிழ் மொழியில் இருந்தமையால் மலீக் அஸீஸிடம் இந்த கோப்பை பார்க்குமாறு வழங்கியிருந்தேன். அதன் அடிப்படையிலேயே அக்கோப்பை வழங்கினேன் என்றும் அவர் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

No comments:

Post a Comment