இலங்கையும் இந்தியாவும் கையெழுத்திட்டு இரு நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையே இலங்கை அரசு மீறியிருக்கின்ற நிலையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வகித்தாலும் அதனை அரசு நிறைவேற்றுமா என்பது கேள்வியே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
ஆனாலும் மூன்றாம் தரப்பு உறுதி மொழியுடனான மத்தியஸ்தம் என்ற விடயம் நல்லதாக இருந்தாலும் மத்தியஸ்தம் வகிக்க எந்த நாடு முன்வரப்போகின்றது. அவ்வாறு வருகின்ற நாடு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமா என்றும் பார்க்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது சம்மந்தமாக எந்தவித முடிவையும் எடுக்கவில்லை. ஏனென்றால் யார் வேட்பாளர் என்பது இதுவரையில் தெரியாது. இத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் பலரது பெயர்களும் கூறப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆகையினால் யார் யார் வேட்பாளர்களாகப் போட்டியிடப் போகின்றனர் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் போட்டியிடக் கூடிய வேட்பாளர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எப்படிக் கையாளர்வார்கள் என்பதனையெல்லாம் ஆராய்ந்து தான் நாங்கள் சரியான முடிவை எடுக்கலாம்.
அடுத்ததாக இத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்விற்கு சர்வதேச நாடுகளின் உதவியுடன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் எழுத்து மூல உத்தரவாதம் வழங்குமிடத்து ஆதரவை வழங்கலாமென்றும் அத்தகைய நிலைப்பாட்டை சகல கட்சிகளும் இணைந்து எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்திருக்கின்றது.
அதுவொரு நல்ல விடயம். ஆனால் அதில் இருக்கக் கூடிய பிரச்சினைகளில் முதலாவதாக எந்த நாடு இந்த விடயத்தில் மத்தியஸ்தத்தை வகிக்குமென்பது எனக்குத் தெரியவில்லை.
அவ்வாறாக ஒரு நாடு மத்தியஸ்தத்தை வகித்தாலும் அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். ஆனால் அப்படியான நம்பிக்கை எங்களுக்கு இல்லை என்றார்.
பருத்தித்துறை விசேட நிருபர்
No comments:
Post a Comment