தங்கக் கடத்தலில் ஈடுபட்ட 9 இலங்கையர் மற்றும் 6 இந்தியர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 3 கிலோ கிராமிற்கும் அதிக நிறை கொண்ட ரூபா 2 கோடி 80 இலட்சம் (ரூ. 28 மில்லியன்) பெறுமதியான தங்கத்துடன், 9 இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (03) அதிகாலை 2.30 மணியளவில் பெங்கொக்கிலிருந்து இலங்கை வந்த UL 407 மற்றும் TG 307 ஆகிய இரு விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தங்கத்தை சங்கிலி வடிவில் அமைத்து கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் நிட்டம்புவ, கம்பஹா, கல்கிஸ்ஸை, கிரிந்திவெல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை, கட்டுநாயக்க பிரிவு குற்றப் புலனாய்வுத் அதிகாரிகளுக்கு (சிஐடி) கிடைத்த தகவலுக்கமைய, நேற்று (02) அதிகாலை 5.20 மணியளவில் ஒரு கிலோ கிராம் 60 கிராமுடன் (1.06kg) 4 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று (02) பிற்பகல் 1.55 மணியளவில் இந்தியாவுக்கு செல்வதற்கு தயாராக இருந்த 2 இந்தியர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுத் அதிகாரிகளுக்கு (சிஐடி) கிடைத்த தகவலுக்கமைய, ஒரு கிலோ கிராம் 370 கிராம் (1.370kg) தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, நேற்றைய தினம் சுமார் ரூ .1 கோடி 70 இலட்சம் (ரூ. 17 மில்லியன் தங்கமும், இன்றைய தினம் (03) ரூபா 2 கோடி 80 இலட்சம் (ரூ. 28 மில்லியன்) என மொத்தமாக சுமார் ரூபா 4 ½ கோடி (ரூ. 45 மில்லியன்) பெறுமதியான தங்கம் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment