குருநாகல் டொக்டர் ஷாஃபியின் மனைவியை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்ததாக வெளிவந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் ஆளுநர் அலவி மொளலானாவின் குடும்ப அங்கத்தவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமே சமூக வலைத்தளங்களில் போலிப் பிரசாரங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை எப்.பி.ஐ நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு அமெரிக்க அதிகாரிகள், கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மொழி பெயர்ப்பாளர் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகளுடன் வெலிசறை கடற்படை முகாமுக்குச் சென்று, அங்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த முஸ்லிம் சந்தேக நபர்களை தனியாக விசாரணைக்குட்படுத்தியதற்கான காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலே விமல் வீரவன்ச எம்.பி இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது நாட்டில் அனைத்து இன மதத்தவர்களும் ஒன்றாக வாழ வேண்டும். அதற்காக பயங்கரவாதத்துக்கும் அடிப்படைவாதத்துக்கும் ஒத்துழைப்பு வழங்குபவர்களை பாராளுமன்றத்தில் அமருவதற்கு அனுமதிக்க முடியாது.
சட்ட மா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல்களான அசாட் நவாவி மற்றும் மலிக் அசீஸ் ஆகியோர் சஹ்ரான் பற்றி தெரிந்திருந்தும் அவர் பற்றிய ஆவணக் கோவைகளை விசாரணைக்குட்படுத்தாமல் மறைத்துள்ளனர்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பை தடை செய்ய முற்பட்டபோது அதற்கு ஒத்துழைப்பு வழங்காமல் பின்வாங்கியுள்ளனர் என்றார்.
ஷம்ஸ் பாஹிம், லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment