வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களின் ஒரே குரலாகவே தமிழ் மக்கள் பேரவையினால் “எழுக தமிழ்” பேரணி நடத்தப்படவுள்ளது. இப் பேரணியில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் யாரும் இதனை எதிர்க்க மாட்டார்கள் என ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்துக்கான விசாரணைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றுக்காக தமிழர் தாயக பிரதேசங்களில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழ் தலைமைகளும் அரசுக்கு முண்டு கொடுத்து வருகின்றனர்.
எனவே தமிழர்களின் குரலாக ஒலிக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது. அதன் ஊடாக எழுக தமிழ் பேரணியும் மிக எழுச்சி பூர்வமாக நடத்தப்பட்டது. அந்த எழுச்சி தமிழர்களின் ஒற்றுமையையும் பலத்தையும் தென்னிலங்கை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் பல செய்திகளை சொல்லியிருக்கும். அதேபோல இந்த வருடமும் எழுக தமிழ் பேரணி நடைபெறவுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படவுள்ள எழுக தமிழ் பேரணி ஒட்டு மொத்த தமிழ் மக்களின் கோரிக்கையாகும் என்றார்.
பருத்தித்துறை விசேட நிருபர்
No comments:
Post a Comment