எமது கட்சி உறுப்பினர்களிடம் ஆலோசனை எதனையும் நடத்தாமல், ஜனாதிபதி வேட்பாளரை பொதுஜன பெரமுன அறிவிக்க நினைப்பது தவறென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரைக் களமிறக்குவதற்கே நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் சந்தித்து, பொருத்தமான வேட்பாளரைத் தீர்மானிக்க முடியும்.
ஆனால் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுஜன பெரமுன கட்சி மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்படுவார் என பரவலாக கூறப்படுகின்றது.
அவ்வாறு எமது கட்சியின் அனுமதியின்றி ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுமாயின் நாமும் செப்டம்பர் 2 ஆம் திகதி நடாத்தும் கட்சி மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை அறிவிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்” என மஹிந்த அமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment