வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தினால் தீர்வு வழங்கப்படும் என நாமல் ராஜபக்ஷ கூறுவது வேடிக்கையானது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து கடந்த காலத்தில் கூட்டமைப்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் விலகியது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 2015 இல் தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்வுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு புதிய அரசியலமைப்பு தீர்மானம் நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்டது.
இதன் பின்னர் இடைக்கால அறிக்கை வந்தபோது, குறித்த அறிக்கை நாட்டை பிளவு படுத்தும் என கூறி நாடாளுமன்றத்தை கலைத்ததாக மஹிந்த அரசாங்கம் கூறியது.
இவ்வாறு இருக்கையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு நாமல் ராஜபக்ஷ குறுகிய நோக்கத்தோடு, உண்மைகளுக்கு மாறாக கருத்துக்களை தெரிவிப்பதை கண்டிக்கின்றோம்.
யுத்தத்தின்போது யார் போர் குற்றம் இழைத்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும். இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறாமல், வடக்கு கிழக்கு மக்களுக்கான தீர்வு திட்டத்தை முன்வைக்காமல் இவ்வாறு கூறுவதையிட்டு வேதனையடைகின்றோம்” என கூறினார்.
No comments:
Post a Comment