மன்னாரில் காணி உறுதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி நகர சபை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டமானது நேற்றைய தினம் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் நகர சபையில் கடமையாற்றிய தொழிலாளர்களுக்கு அரச காணிகள் வழங்கப்பட்ட போதும் அதற்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படாமையால் வீட்டுத் திட்டங்களும் ஏனைய வீட்டு வசதிகளையும் பெற முடியாது இருப்பதாக கூறியே ஐக்கிய இலங்கை ஸ்தாபன தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தின் முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்ராஸ் உட்பட அனைத்து திணைக்கள அதிகாரிகளும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக மன்னார் கிளை ஐக்கிய இலங்கை ஸ்தல ஸ்தாபன தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் காலை தொடக்கம் அபிவிருத்தி குழுக் கூட்டம் முடியும் வரை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது இவர்கள் 'தொழிலாளருக்கு அநீதி காட்டாதே, மக்களை ஏமாற்றாதே உண்மையை ஒழிக்காதே, ஏமாற்றாதே ஏமாற்றாதே நகர சபை ஊழியர்களை ஏமாற்றாதே, வழங்கப்பட்ட காணிகளுக்கு வீட்டுத் திட்டங்களை வழங்கு' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் முடிவுற்றதும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் பிரதேச செயலாளர், மன்னார் நகர சபை தவிசாளர், காணி உதவி ஆணையாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது அவர்கள், தமக்கு ஜீவபுரம் பகுதியில் அரச காணிகள் வழங்கப்பட்டன. ஆனால் 15வருடங்கள் கடந்துள்ள நிலையில் குறித்த 44பேருக்கும் காணி உறுதிப்பத்திரம் இன்னும் வழங்கப்படவில்லை.
அத்துடன் இந்த காலப் பகுதியில் குடியிருப்புக்கு காணி இல்லாத நிலையில் புதிதாக காணி கோரி விண்ணப்பித்த 15ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு புதிதாக காணி வழங்க எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும் வீட்டுத் திட்டங்களோ, குடிநீர் வசதிகளோ, மலசலகூட வசதிகள், இலவச மின்சார வசதிகள் அற்ற நிலையில் இருப்பதால் தங்களுக்கு உடன் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வீட்டுத் திட்டங்கள் ஏனைய வசதிகளையும் பெற ஆவண செய்யப்பட வேண்டும் என கோரினர்.
இதனையடுத்து ஓரிரு வாரங்களுக்குள் காணி கச்சேரி வைத்து காணி உறுதிப்பத்திரங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டது.
தலைமன்னார் நிருபர்
No comments:
Post a Comment