தோட்டத் தொழிலாளர், தனியார் துறையினருக்கும் நியாயமான சம்பள அதிகரிப்பு அவசியம் - தற்போதைய அரசு தனியார் துறை சம்பள உயர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தக்கூட முயலவில்லை - News View

About Us

About Us

Breaking

Friday, August 2, 2019

தோட்டத் தொழிலாளர், தனியார் துறையினருக்கும் நியாயமான சம்பள அதிகரிப்பு அவசியம் - தற்போதைய அரசு தனியார் துறை சம்பள உயர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தக்கூட முயலவில்லை

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவை அரசசார், நிறுவன ஊழியர்களுக்கு வழங்கி தனியார் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நியாயமான சம்பள அதிகரிப்பை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று பாராளுமன்றித்தில் கோரினார். 

27/2நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறியதாவது, 2019 வரவு செலவுத் திட்டத்தினூடாக அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டாலும் அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள், அதிகார சபைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவில்லை. இது பெரும் அநீதியாகும். அரசசார் நிறுவனங்களுக்கு ஏன் இந்த கொடுப்பனவு மறுக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.

ஜூலை மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 2,500 கொடுப்பனவு வழங்கப்படுகிறது. சம்பள அதிகரிப்பின் போது அரச கூட்டுத்தாபனங்கள். சபைகள் மற்றும் அதிகார சபை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க கடந்த கால அரசுகள் நடவடிக்கை எடுத்தன.

வரவு செலவுத் திட்டத்தினூடாக அரச ஊழியர்களுக்கு வழங்கிய தொகையளவு இல்லாவிட்டாலும் நியாயமான தொகையினால் தனியார் துறைக்கு சம்பள அதிகரிப்பு வழங்க கடந்த கால அரசுகள் நடவடிக்கை எடுத்திருந்தன.

நிதி அமைச்சரும் தொழில் அமைச்சரும் தனியார் துறையுடன் கலந்துரையாடி தனியார் துறைக்கு சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க எமக்கு முடிந்தது. ஆனால் தற்போதைய அரசு தனியார் துறை சம்பள உயர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தக்கூட முயலவில்லை.

தனியார் துறைக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் உச்ச பட்ச தலையீடு செய்ய வேண்டும்.

இந்த அரசாங்கம் ஆட்சிபீடமேற தோட்ட மக்கள் பெரும்பங்களித்தனர். கடந்த நான்கரை வருடங்களாக அந்த மக்களை அரசாங்கம் ஏமாற்றி வருகிறது.

ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் பெற்றுத் தருவதாக தொடர்ந்தும் மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும். எமது நாட்டு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

எனவே தனியார் மற்றும் தோட்ட ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும். 2019 முதல் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 2500 ரூபா கொடுப்பனவை அரசசார் நிறுவன ஊழியர்களுக்கும் வழங்குமாறு கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

No comments:

Post a Comment