நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உள்ளிட்ட ஐவருக்கு பிணை - ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 30, 2019

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உள்ளிட்ட ஐவருக்கு பிணை - ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பில் பயங்கரவாதியின் உடல் புதைக்கப்பட்டமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உட்பட ஐந்து பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, போக்குவரத்தினை தடை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் குறித்த ஐவரின் மீதும் முன்வைக்கப்பட்டன.

மேலும் இதன்போது பயங்கரவாதியின் உடற்பாகங்கள் பொதுமக்களின் எதிர்ப்பினையும் மீறி புதைக்கப்பட்டமை தொடர்பாக அரசாங்க அதிபருக்கு எதிரான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.

இதனையடுத்து, குறித்த ஐந்து பேரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அத்தோடு இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சீயோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதியின் உடற்பாகங்கள் கடந்த 27ஆம் திகதி, மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டது. இதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், அன்றைய தினம் இரவு கல்லடி பாலத்தை மறித்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கல்லடி பாலத்தினை மறித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான செல்வி மனோகர், சுஜீகலா உட்பட ஐந்து பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment