அனுமதிப்பத்திரமின்றி முறையற்ற விதத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ்களுக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் விதிக்கப்பட்டிருந்த 2,50,000 ரூபா தண்டப்பணம் 5,00,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபைத் தலைவர் ஜனக மல்லிமாராச்சி தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மாகாணங்களில் வீதி அனுமதிப்பத்திரமின்றி 200 பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன. இவை அனுமதிப் பத்திரமின்றி சேவையில் ஈடுபடுவதால் அனுமதிப்பத்திரத்துடன் சேவையில் ஈடுபடும் பஸ் உரிமையாளர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுகின்றது. அவர்கள் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தியே சேவையில் தமது பஸ்களை ஈடுபடுத்துகின்றனர்.
எனினும் வீதிகளில் அனுமதிப்பத்திரமின்றி பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவோர் குறிப்பிட்ட நேரங்களின்றி முறையற்ற விதத்தில் சேவையில் ஈடுபடுகின்றனர். இதனால் பஸ் நடத்துநர்கள் உள்ளிட்டோர் மத்தியில் மோதல்களும் இடம்பெறுகின்றன.
குறிப்பாக இவ்வாறு பெரும் எண்ணிக்கையான பஸ்கள், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்புக்கிடையே சேவைகளில் ஈடுபடுகின்றன. இந்த பஸ்கள் குறிப்பிட்ட பஸ் நிலையங்களுக்குள் உள்வாங்கப்படுவதில்லை.
இத்தகைய பஸ்கள் வெள்ளவத்தை, மருதானை, தெஹிவளை, கொள்ளுப்பிட்டி ஆகிய இடங்களிலிருந்து தமது பயணத்தை ஆரம்பிக்கின்றன. இது பாரிய அநீதியாகும்.
பஸ் அனுமதிப்பத்திரம் உள்ளவர்களிடமிருந்து இது தொடர்பில் பெரும் எண்ணிக்கையான முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
இதன் காரணமாகவே 2,50,000 ரூபாவாகவிருந்த தண்டப்பணத்தை 5,00,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது காலத்திற்கேற்ற நடவடிக்கையாகும் என்றும் தேசிய போக்குவரத்து சபைத் தலைவர் ஜனக மல்லிமாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment