சீனி கொண்ட பானங்களுக்கு சீனி வரியை மீண்டும் விதிப்பதற்கு அமைச்சரவை பரிசீலித்து வருகிறது.
சீனி அற்ற பானங்கள் சந்தையில் இருந்து நீங்குவதைத் தடுக்கும் நோக்கில் சீனி கொண்ட பானங்களுக்கு வரி விதிப்பதற்கு அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள டொக்டர் ராஜித சேனாரத்ன, 52 நாள் அரசியல் நெருக்கடியின்போது சீனி கொண்ட பானங்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை அப்போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ நீக்கியிருந்தார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனி கொண்ட பானங்களுக்கு மீண்டும் வரி விதிக்க சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்திருந்தார் என்பதோடு, அதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் நிதியமைச்சினால் இரு வார கால அவகாசம் கோரப்பட்டிருந்த்து.
இது தொடர்பில் நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதோடு, இதன்போது வரி விலக்கு வழங்கப்படும் நிலையில் சீனி அற்ற பானங்கள் சந்தையில் இல்லாமல் போகும் என சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் நிதி அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், 6 கிராம் சீனி கொண்ட பழ பானங்களுக்கு வரி விலக்களிக்கவும் ஏனைய சாதாரண பானங்களுக்கு வரி விதிக்கவும் இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த இறுதி முடிவு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) நிதி அமைச்சில் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment