அரச கணக்குக் குழு ஆய்வுக்குட்படுத்திய அரச நிறுவனங்கள் 838 இல், செயற்திறன் மைல்கல்லை எட்டிய 109 நிறுவனங்களைக் கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 5 ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதில் செயற்றிறன் மிக்க அரச சிறப்பு செலவீட்டு பிரிவில் முதலிடத்தை பிரதமர் அலுவலகம் பெற்றுள்ளதுடன், மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு அமைச்சுக்களுக்கிடையில் முதலிடத்தை பெற்றுள்ளதாக அரச கணக்குக் குழு தலைவர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் மாநாடு நேற்று பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.
2017 ஆண்டில் அரச நிறுவனங்களின் செயற்திறன் குறித்து அரச கணக்குக் குழு விசாரணை நடத்தியது.
அமைச்சு, திணைக்களம், மாகாண சபை, உள்ளூராட்சி சபை, விசேட செலவீட்டு பிரிவு என பல பிரிவுகளாக விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
அரச சிறப்பு செலவீட்டு பிரிவில் பிரதமர் அலுவலகம் முதலிடத்தையும் கணக்காய்வு திணைக்களம் இரண்டாமிடத்தையும் லஞ்ச ஊழல் திணைக்களம் மூன்றாமிடத்தையும் பெற்றன.
அரச திணைக்களங்களில் முதலிடத்தை திறைசேரி நடவடிக்கைத் திணைக்களமும் மாவட்ட செயலகங்களிடையே முதலிடத்தை கம்பஹா மாவட்ட செயலகமும் பெற்றுள்ளன.
அரச நிறுவனங்களின் செயற்திறன், நிதிக்கட்டுப்பாடு என்பன குறித்தே இதில் முக்கியமாக ஆராயப்பட்டன. 838 நிறுவனங்கள் குறித்த விசாரணை அறிக்கை அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் 22 சிறப்பு செலவீட்டு அலகுகள், 48 அமைச்சுகள், 25 மாவட்ட செயலகங்கள், 9 மாகாண நிதியங்கள் என்பனவும் அடங்குகின்றன. இதில் செயல்திறன் எல்லையை அடைந்த 109 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த காலங்களை விடக் கூடுதல் நிறுவனங்கள் இம்முறை விசாரணைக்குட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment