நாட்டைக் கடனிலிருந்து எவ்வாறு மீட்பது என்பது பற்றிய எந்த யோசனைகளும் உள்ளடக்கப்படாத வரவுசெலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அத்துடன் அரசாங்கத்துக்கு வருமானத்தை ஈட்டும் வழிமுறைகள் எதுவும் இதில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லையென்றும் சுட்டிக்காட்டினார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பொறுத்தவரையில் ஓரளவுக்கு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. எனினும், அங்கு நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்கள் அதிகமாகவுள்ளன. அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பது போதுமானதாக இல்லாவிட்டாலும் இது ஓர் ஆரம்பமாகக் காணப்படுகிறது.
நாட்டை கடனிலிருந்து எவ்வாறு மீட்பது, வருமானத்தை எப்படி அதிகரிப்பது, வேலைவாய்ப்பை எப்படி ஏற்படுத்துவது போன்ற விடயங்கள் தொடர்பில் வரவுசெலவுத் திட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.
வரவுசெலவுத் திட்டம் மக்களுக்குத் தீமையை ஏற்படுத்தாத வகையில் இருப்பதுடன், இதற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றார்.
இதேவேளை, தேர்தலை முன்னிட்டு வைக்கப்படும் வரவுசெலவுத் திட்டம் எனக் கூறப்பட்டாலும் நாட்டின் பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பொறுப்புடன் தயாரிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டமாக இது அமைந்துள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
ஒரு தரப்பு மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி வடக்கு கிழக்குக்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் செயற்றிட்டங்களை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment