ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ளாததே இதுவரை அரசியல் தீர்வை அடைய முடியாது போனதற்கு காரணமாகும். ஆனால் சரித்திரத்தில் முதல் தடவையாக அனைத்து அரசியல் சட்சிகளும் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க களுத்துறையில் தெரிவித்தார்.
இவ்வாறான வெற்றிக்குக் காரணம் ஐக்கிய தேசியக் கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டதாலே என்றும் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 474 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட களுத்துறை வர்த்தகத் தொகுதியையும் பொது சந்தை தொகுதியையும் திறந்து வைத்த பின்னர் களுத்துறை பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே கூறினார்.
இன்றுள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் நாட்டை பிரிக்காது நாட்டை பிரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. நாட்டிற்கு புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் இணைந்து அரசியலமைப்பு சபையொன்றை அமைத்துள்ளன.
அதன்படி அனைவரும் இது தொடர்பாக அனைவரும் ஒருமைப்பாட்டுக்கு வரமுடியுமாவென கலந்துரையாட நாம் குழுவொன்றை அமைத்தோம். எமக்குக் கிடைக்கும் அறிக்கைகளை அரசியலமைப்புச் சபைக்கு முன்வைப்போம்.
அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய பிரிவுகளிலிருந்தும் கிடைத்த அறிக்கைகள் அனைத்தையும் அரசியலமைப்பு சபைக்கு முன்வைத்துள்ளோம். இவ்வாறான பின்னணியில் எனக்கு மாத்திரம் தனியாக அரசியலமைப்பைத் தயாரிக்க முடியாது.
அரசியலமைப்பு அங்கீகரிகரிக்கப்பட வேண்டுமென்றால் பாராளுமன்ற உறுப்பினர்களின் 2/3 வாக்குகள் பெறப்பட வேண்டும். எமது மல்வத்த மகாநாயக்க தேரர் சுட்டிக்காட்டியவாறு 2/3 கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. அவ்வாறான சூழ்நிலையில் நாட்டைப் பிரிக்கின்றேன் நாட்டை உடைக்கின்றேன் என என் மீது குற்றம் கூறுவது தவறாகும்.
மல்வத்தை மஹநாயக்க தேரரின் கூற்று குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் அரசியலமைப்புக் குறித்து விரிவாக கலந்துரையாடினோம். அந்த கலந்துரையாடல் மூலம் அநேகமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடிந்தது. இலங்கை வரலாறிலே முதற் தடவையாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றையாட்சியை ஏற்றுக்கொள்கின்றன.
இந்த நிலைமையை அடைந்தது நாம் பெற்ற பாரிய வெற்றியெனக் கூற வேண்டும். நாம் தற்போது இவ்வாறான உறுதியான நிலைமைக்கு வந்துள்ளதால் தற்போது அரசியலமைப்பை உருவாக்க முடியாவிட்டாலும் பின்னராவது அதனைச் செய்யலாம். வரலாற்றில் பல தடவைகள் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெற்றி பெறவில்லை.
No comments:
Post a Comment