ஜோன்ஸ்டன் பெனாண்டோவிற்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட 5 வழக்குளில் ஒரு வழக்கிலிருந்து நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தான் அமைச்சராக இருந்த 2010-2014 காலப்பகுதியில் சொத்து விபரத்தை வெளியிடாத குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் ஒவ்வொரு ஆண்டிற்கும் தனித்தனியாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்றைய தினம் (29) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.
அதற்கமைய, 2010 மார்ச் 31 முதல் 2011 மார்ச் 31 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் சொத்துகளை வெளியிடாத குற்றம் தொடர்பான வழக்கு கடந்த ஜனவரி 02 ஆம் திகதி நிறைவடைந்ததோடு, அவ்வழக்கின் தீர்ப்பே இன்று (29) அறிவிக்கப்பட்டது.
கடந்த 2015 டிசம்பர் 15 ஆம் திகதி அவருக்கு எதிராக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, அதில் தலா ஒரு வழக்கிற்கு ரூபா 10 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகள் மற்றும் ரூபா 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.
1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சட்டம் மற்றும் சொத்துக்கள், பொறுப்புக்கள் சட்டத்தின் பிரிவு 9 ன் கீழ், சொத்துகள், பொறுப்புகள் குறித்தான விபரத்தை வெளியிடாமல் மறுக்கும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment