கரவெட்டி கமநல சேவை நிலையத்திற்குரிய பாதிக்கப்பட்ட 172 விவசாய செய்கையாளர்களுக்கு, விவசாய காப்புறுதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (31) கரவெட்டி கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில், விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதனின் அதற்கான ஆவணங்களை உரிமையாளர்களிடம் வழங்கி வைத்தார்.
வடமாகணத்தில் முதலாவதாக யாழ் மாவட்ட கரவெட்டி பிரதேசத்தில் விவசாய காப்புறுதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உருளைக்கிழங்கு, பெரியவெங்காயம், நெல், சோளம், சோயா, மிளகாய் ஆகிய ஆறு பயிர் செய்கைகள் காப்புறுதியில் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூபா ஒரு இலட்சம் வரை இழப்பீடு பெற முடியும் என்பதோடு, இத்திட்டத்திற்காக ரூபா 5,228 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
உள்ளூர் விவசாயிகளின் நலன் கருதி, உருளைக்கிழங்கிற்கு 40% இறக்குமதி வரியை நிரந்தரமாக பேணுவதற்கு பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தியிருந்த நிலையில் அதில் எவ்விதமான மாற்றங்கள் இடம்பெறாது எனவும் உறுதிமொழி வழங்கினார்.
இது குறித்தான கோரிக்கையை விவசாய நிலையங்களில் விவசாய சம்மேளன உறுப்பினர்கள் விடுத்தமை தொடர்பில், அதனை பெற்றுத் தந்த அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வில் கரவெட்டி பிரதேச செயலாளர், யாழ்ப்பாண விவசாய திணைக்கள ஆணையாளர், மற்றும் பிரதியமைச்சரின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புகையிலை செய்கையாளர்களுக்கு பாதிப்பில்லை யாழ் மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் உருளைக்கிழக்கு செய்கை பண்ணும் கமக்கார அமைப்புக்களினால், விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதனை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (31) நீர்வேலி கரந்தன் பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது.
கரந்தன் விவசாய சம்மேளன விவசாயிகளுடனான சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர், யாழ்மாவட்டத்தில் பணப்பயிரான புகையிலை செய்கையில் ஈடுபடுகின்ற விவசயிகளுக்கு மாற்று பயிர் அறிமுகம்ப்படுத்தும் வரை அவர்கள் தமது புகையிலை செய்கையினை செய்யலாம் என்றார்.
இது தொடர்பாக விவசாய அமைச்சர் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், அவர்கள் இதற்கான மாற்று பயிரினை அறிமுகப்படுத்தி ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்த பின்னர் மாத்திரமே புகையிலை செய்கை தடை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment