கலஹா வைத்தியசாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, அப்பிரதேசத்தைச் சேர்ந்த 07 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த 07 பேரும் கண்டி மேலதிக நீதவான் முன்னிலையில் நேற்று (01) ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் அவர்களுக்கு விளக்கமறியல் விதித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (28) கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தை மரணமுற்ற சம்பவத்தை அடுத்து, குறித்த குழந்தைக்கு உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிரதேசவாசிகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, குறித்த வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரை வைத்தியசாலைக்குள்ளிருந்து வெளியேறாத வண்ணம் வைத்தியசாலையை முற்றுகையிட்டிருந்தனர். இதனையடுத்து குறித்த வைத்தியருக்கு, பொலிசாரின் உடை அணிவிக்கப்பட்டு, பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது, அமைதியற்று செயற்பட்ட பிரதேசவாசிகள் வைத்தியசாலை மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். அதற்கமைய அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த சந்தேகநபர்கள் 07 பேரும் நேற்றிரவு (01) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, கலஹா பொலிசார் மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவத்தை அடுத்து, கவஹா வைத்தியசாலை மூடப்பட்டது.
இதனையடுத்து, வைத்தியசாலையை மீண்டும் திறக்குமாறு, இன்று (02) முற்பகல் முதல் வைத்தியசாலையின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் பொலிசாரின் தலையீட்டை அடுத்து அவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment